க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எதிர் கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு

..
how-to-face-gce-ol-exam

பரீட்சை மண்டபத்தில்...

1. நேர காலத்தோடு செல்க:

பரீட்சை நடைபெறுமென நேரசூசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு, குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன்னரேனும் பரீட்சை நடைபெறுமிடத்திற்கு சென்றுவிடல் வேண்டும். வீட்டிலிருந்து புறப்படும் போதே, பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை மற்றும் பரீட்சைக்குத் தேவையான உபகரணங்கள் என்பனவற்றை எடுத்துக் கொண்டமையை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பரீட்சை நடைபெறுமிடத்திற்குச் சென்றவுடன், அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மண்டபத்தை தேடிச் சென்று, சுட்டெண் பொறிக்கப்பட்ட மேசையில் அமர்ந்து கொள்ள வேண்டும். நேரத்தை கணித்துக்கொள்வதற்கு வசதியாக பரீட்சை மண்டபத்திற்கு கைக் கடிகாரமொன்றை கொண்டு செல்வது பிரயோசனமளிக்கும்.

2. மனதை அமைதிப்படுத்திக் கொள்க:

பரீட்சை மண்டபத்தில் குழப்பமடைவதும், மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் ஒரு பொழுதும், பரீட்சையில் சித்தியடைவதற்கு கைகொடுக்கப் போவதில்லை என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். தேவையற்ற சிந்தனைகள், குழப்பங்கள் என்பவற்றிலிருந்து மனதை எப்பொழுதும் தூரப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி, திடமாக வைத்துக் கொள்ளவேண்டும். எப்படியும் பாடப்பரப்புக்குள் தான் வினாக்கள் வரப்போகின்றன என்பதையும், அவற்றில் முழுமையாக கற்றவற்றிற்கு மாத்திரம் தான் பூரணமாக விடையளிக்க முடியும் என்பதையும் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். கற்றிராத மற்றும் குழப்பமான வினாக்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவிடக் கூடாது என்பதில் உறுதியோடு இருக்க வேண்டும். தேவைப்படின் தண்ணீர் கொண்ட போத்தலொன்றை பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு சென்று, இடைக்கிடை அருந்துவதன் மூலம் தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

3. சுட்டெண்ணை எழுதுக:

வினாத்தாளை வாசிக்க ஆரம்பிக்கு முன்னர், விடை எழுதவிருக்கும் அனைத்துப் பத்திரங்களிலும் சுட்டெண்ணை தெளிவான கையெழுத்தில் எழுதிவிடல் வேண்டும். இதனால் இறுதி நேரத்தில் அவசரம் காரணமாக சுட்டெண்ணை எழுத மறந்து போவதிலிருந்து தவிர்ந்துகொள்ள முடியும். விடை எழுதுவதற்காக புத்தகங்கள் தரப்படினும் கூட, அப்புத்தகத்தின் ஒன்று விட்ட பக்கங்களில் சுட்டெண்ணை அவசரமாக குறித்துக் கொள்ள வேண்டும்.

4. அறிவுறுத்தல்களை கவனமாக வாசிக்க.

வினாத்தாளில் வினாக்களை வாசிக்க முன்னர், தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முதலில் கவனமாக வாசிக்க வேண்டும். இதனால் தேவையற்ற முறையில் மேலதிக வினாக்களை செய்து நேரத்தை வீணடிப்பதை தவிர்ந்து கொள்ளலாம். அத்தோடு சில வினாக்களுக்கு விடையளிக்கத் தேவையான தரவுகள், அறிவுறுத்தல் பகுதியிலேயே தரப்படுவதால், அப்பகுதியை வாசிப்பது மிக அவசியமாகும். விடைத்தாளில் விடையை எழுது முன்னரும், விடைத்தாளில் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையும் வாசிக்க சொற்ப நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

5. பல்தேர்வு வினாக்கள் எனின்...

- மிகப்பொருத்தமான ஒரு விடையை மாத்திரம் தரப்பட்ட விடைகளிலிருந்து தெரிவு செய்து வினாத்தாளில் குறித்துக் கொள்ள வேண்டும். பொருத்தமில்லாத விடைகளை முதலில் நீக்குவதன் மூலம், பொருத்தமான விடையை இலகுவாக கண்டுபிடிக்கலாம். கணித்தல்களை உள்ளடக்கிய சில பல்தேர்வு வினாக்களுக்கு இம்முறை பொருந்தாது. எனவே வினாவிற்கு ஏற்றாற்போல் எம்முறையில் விடையைத் தெரிவு செய்வது என்பதை தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.

- குழப்பமான மற்றும் விடை தெரியாத வினாக்களில் தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதை முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். அப்படியான வினாக்களின் இலக்கங்களை வினாத்தாளில் வட்டமிட்டு அடையாளப்படுத்திவிட்டு, அடுத்த வினாவிற்கு சென்று விடல் வேண்டும். இதனால் நேர விரயத்தையும், தேவையற்ற மனக் குழப்பங்களையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

- உறுதியாக விடை தெரிந்த வினாக்களுக்கான விடைகளை, உடனடியாக விடைத்தாளிலும் குறித்துவிடல் வேண்டும். விடைத்தாளில் விடைகளை தெளிவாகவும், அறிவுறுத்தல்களுக்கமையவும் சிறந்த எழுதுக்கருவியை உபயோகித்து குறித்தல் அவசியமாகும். இறுதியில் குறிப்போம் என விட்டு வைப்பது, கடைசி நேரத்தில் கைகொடுக்காமல் போகும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதை மனதிலிருத்திக் கொள்ளவேண்டும்.

- முதல் தடவை எல்லா வினாக்களும் விடையளிக்க முயற்சி செய்த பின்னர், இரண்டாம் தடவை வட்டமிடப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க முயற்சிக்க வேண்டும். வட்டமிடப்பட்ட வினாக்களிலும், பரீட்சைக்கு முன்னர் கற்ற பகுதிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். கற்றிராத பகுதிகளிலிருந்து வரும் வினாக்களை வேறு குறியீடு ஒன்றின் மூலம் அடையாளப்படுத்தி வைத்துவிடல் வேண்டும்.

- விடைத்தாளில் எந்த ஒரு வினாவையும் விடையளிக்காது வெறுமையாக விட்டு விட வேண்டாம். மூன்று தடவைகள் முயற்சித்த பின்னரும், ஒரு வினாவிற்கு உறுதியான விடை இல்லாவிடின், சந்தேகத்திற்கிடமான இரண்டு, மூன்று விடைகளில் ஒன்றை மனதால் தெரிவு செய்து, அதனை விடைத்தாளில் குறித்து விடல் வேண்டும். இதனால் அதிர்ஷ்டம் சில வேளைகளில் கைகொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம்.

- விடைத்தாளில் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை குறிப்பதையும், குறிக்கப்பட்ட விடைகளை வெட்டுவதையும் முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

6. அமைப்புக் கட்டுரை வினாக்கள் எனின்...

- அமைப்புக் கட்டுரை வினாக்களுக்கான விடைகளை, வினாத்தாளிலேயே செய்து முடிக்க வேண்டும். தரப்பட்ட புள்ளிக்கோடுகள் விடையளிக்க தாராளமாகப் போதுமானது என்பதை மறந்து விடக் கூடாது. எனவே தேவையில்லாத விளக்கங்களை அளிப்பதையும், மேலதிக விளக்கங்கள் அளிப்பதையும் இப்பகுதியில் முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

- தரப்பட்ட வினாத்தாளுக்கு மேலதிகமாக விடைத்தாள்களைப் பெற்று அவற்றை இணைப்பதை இயலுமானவரை தவிர்ந்து கொள்ள வேண்டும். அமைப்புக் கட்டுரை வினாக்களுக்கு சுருக்கமானதும், தெளிவானதுமான விடைகளே எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.

- முதலாம் வினாவிலிருந்தே விடையளிக்க வேண்டும் என எந்த விதமான நிர்பந்தங்களும் இல்லை என்பதால், இலகுவானதும், பூரணமாக கற்ற பகுதியைச் சேர்ந்ததுமான வினாவை தெரிவு செய்து, அதற்கு முதலில் விடையளிக்க வேண்டும். இதற்காக வினாத்தாள் தரப்பட்ட உடனேயே, என்ன பகுதியிலிருந்து வினாக்கள் வந்திருக்கின்றன என்று மேலோட்டமாக, எல்லா வினாக்களையும் ஒரு முறை நோட்டமிடல் வேண்டும்.

- இங்கும் தெரியாத மற்றும் குழப்பமான வினாக்களில் நேரத்தை விரயம் செய்வதைத் தவிர்த்து, அவற்றை அடையாளமிட்டு வைத்துக் கொண்டு இறுதியாக செய்ய முயசிப்பது பலனளிக்கும்.

7. கட்டுரை வினாக்கள் எனின்...

- கட்டுரை வினாக்களுக்கு தரப்பட்ட விடையெழுதும் படிவங்களில் அல்லது புத்தகங்களில் மாத்திரமே விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு புதிய வினாவையும் புதிய பக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு ஆரம்பிப்பதால் புத்தகம் முடிந்து விடும் அல்லது தரப்பட்ட படிவங்கள் முடிந்து விடும் என ஒருபோதும் அச்சப்படத் தேவையில்லை. அவ்வாறு விடையெழுதும் படிவங்கள் தீர்ந்து போனால், உடனடியாகப் பரீட்சை எழுதும் மேசையில் தட்டி, மேற்பார்வையாளர்களிடம் தேவையான அளவு விடைத்தாள்களைப் பெறமுடியும்.

- இங்கும் முதலாம் வினாவிலிருந்தே விடையளிக்க வேண்டும் என எந்த விதமான நிர்பந்தங்களும் இல்லை என்பதால், இலகுவானதும், பூரணமாக கற்ற பகுதியைச் சேர்ந்ததுமான வினாவை தெரிவு செய்து, அதற்கு முதலில் விடையளிக்க வேண்டும். இதற்காக வினாத்தாள் தரப்பட்ட உடனேயே, என்ன பகுதியிலிருந்து வினாக்கள் வந்திருக்கின்றன என்று மேலோட்டமாக, எல்லா வினாக்களையும் ஒரு முறை நோட்டமிடல் வேண்டும்.

- விடைகளை தெளிவான கையெழுத்திலும், சொற்களுக்கிடையில் போதுமான அளவு இடைவெளிகள் விட்டும் எழுதுவது மிக அவசியமாகும். அசிங்கமான கையெழுத்து உடையவர்கள், சற்றுப் பெரிதாகவும், இடைவெளிகள் விட்டும் எழுதுவதன் மூலம் தெளிவான கையெழுத்தைப் பெறலாம்.

- விடைத்தாளில் வினாக்களின் இலக்கங்களையும், எழுத்துக்களையும் தெளிவாகக் குறித்தல் வேண்டும். தேவைப்படும் போது பக்க எண்களையும் குறித்துக் கொள்ள வேண்டும். விடையெழுதும் புத்தகத்தின் முன்பக்கத்தில், என்னென்ன வினா எண்களை செய்துள்ளீர்கள் என்பதையும், எத்தனை பக்கங்கள் செய்துள்ளீர்கள் என்பதையும் குறிப்பது பயனளிக்கும்.

- தேவைப்படும் போது, படங்கள், அட்டவணைகள் என்பவற்றையும் உபயோகித்து விடையளிப்பது சில வேளை அதிக புள்ளிகளைப் பெற்றுத் தரும்.

8. மற்றவர்களை அவதானிப்பதைத் தவிர்க்க:

பரீட்சை மண்டபத்தில் சக பரீட்சார்த்திகள் எப்படி விடை எழுதுகிறார்கள், எத்தனையாம் வினாவை செய்கிறார்கள், மேலதிக விடைத் தாள்களை இணைக்கிறார்களா என்றெல்லாம் நோட்டமிடுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். இது தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தும்.

9. நேர்மையுடன் நடந்துகொள்க:

பரீட்சை மண்டபத்திற்கு குறிப்புகளை ஒழித்துக் கொண்டு செல்வது, கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வது, சக பரீட்சார்தியின் விடைகளை பார்த்து எழுதுவது போன்ற தவறான செயல்களிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். இது அறிவை மழுங்கடிக்கும் ஒரு செயலாய் இருப்பதோடு, எதிர்காலத்தில் பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

10. உடன் வீடு செல்க:

பரீட்சை நிறைவடைந்தவுடன், உடனடியாக இருப்பிடம் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும். வீணாக தெருக்களிலும், அங்குமிங்கும் நின்றுகொண்டு வினாக்களைப் பற்றியும், விடைகளைப் பற்றியும் கலந்துரையாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலந்துரையாடுவதால், தேவையற்ற மன அழுத்தங்கள் ஏற்படுவதோடு, அடுத்த பரீட்சையை ஒழுங்காக முகங்கொடுக்க முடியாமல் போகும்.

-தில்ஷான் நிஷாம்-
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எதிர் கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எதிர் கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு Reviewed by Lankastudents on 1:51:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.