டிட்வா (Ditwah) பேரழிவின் பின்: மீண்டெழுவோம் ஆரோக்கியமாக!

 

டிட்வா (Ditwah) பேரழிவின் பின்: மீண்டெழுவோம் ஆரோக்கியமாக!


ஆக்கம்: Dr M.B. Mohamed Silmy (MBBS), MOIC- PMCU MAWADIPALLI

2025 நவம்பர் 28 அன்று இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' (Ditwah) சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்த பெருவெள்ளம், நம் நாட்டின் வரலாற்றில் 2004 சுனாமிப் பேரழிவிற்குப் பிறகு ஏற்பட்ட மிகக் கொடிய இயற்கை அனர்த்தமாகப் பதிவாகியுள்ளது. 2004 சுனாமி ஈடுசெய்ய முடியாத உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருந்தது; அதேபோல், இந்த டிட்வா சூறாவளியானது நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதிப்புக்குள்ளாக்கி, சுகாதாரக் கட்டமைப்பிற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதும் நாட்டின் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ள நீர் வடியும் காலப்பகுதியில் பரவக்கூடிய நோய்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும்.

பேரழிவு நிகழ்ந்த உடனடித் தாக்கங்களை விட, அதன் பின்னர் பரவக்கூடிய நோய்களே (Post-disaster epidemics) பொதுச் சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக அமைகின்றன. இக்கட்டுரை, அனர்த்தத்திற்குப் பிந்திய சுகாதாரப் பாதுகாப்பு குறித்து நீங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமான வழிகாட்டல்களை வழங்குகிறது.

1. தற்போதைய நிலைமை: ஒரு பார்வை (Situation Overview)

அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM-DTM) ஆகியவற்றின் டிசம்பர் 12, 2025 வரையான உத்தியோ
கபூர்வ தரவுகளின்படி:

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 8 சதவீதமானோர், அதாவது 1,739,923 நபர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 640 உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 211 நபர்கள் காணாமல் போயுள்ளனர்.

சுமார் 239,493 நபர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது 847 பாதுகாப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.

பல வைத்தியசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், மருந்து விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2. தொடர் சிகிச்சை(Clinic) மற்றும் சுகாதார ஆவணங்கள்

வெள்ளத்தினால் உங்கள் வழமையான மருத்துவச் சேவைகள் தடைப்பட்டிருக்கலாம், ஆனால் சிகிச்சையைத் தொடர்வது மிக முக்கியம்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றுக்காக நீங்கள் வழமையாக உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்த வேண்டாம். மருந்துகள் சேதமடைந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவ முகாம் அல்லது அரச வைத்தியசாலையை அணுகுங்கள்.

உங்கள் சிறுவர் வளர்ச்சிப் பதிவு அட்டை (CHDR) அல்லது கர்ப்பிணிப் பதிவு அட்டை தொலைந்திருந்தால் அல்லது சேதமடைந்திருந்தால், உடனடியாக உங்கள் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தரை (PHM) அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

3. பாதுகாப்பான குடிநீர் மற்றும் மலசலகூட சுகாதாரம்

வெள்ளத்தின் போது கிணறுகள் மற்றும் குழாய் நீர் விநியோகக் கட்டமைப்புகள் அசுத்தமடைவது இயல்பானது.

'பாதுகாப்பானது' என்று உறுதிப்படுத்தப்படாத எந்த நீரையும் குடிக்க வேண்டாம். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து (குறைந்தது ஒரு நிமிடம் கொதிக்க வேண்டும்) ஆறவைத்து குடிக்கவும்.

கிணறுகள் வெள்ள நீரில் மூழ்கியிருந்தால், பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் (PHI) அறிவுரைப்படி 'சூப்பர் குளோரினேஷன்' (Super chlorination) செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

வெள்ள நீர் வடிந்த பின் மலசலகூடங்களை கிருமிநாசினி இட்டு சுத்தம் செய்யவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும், இது காலரா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைத் தீவிரப்படுத்தும்


4. எலிக்காய்ச்சல் (Leptospirosis) அபாயம் 

வெள்ள நீரில் எலிகளின் சிறுநீர் கலப்பதால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் உள்ளது.

வெள்ள நீரில் விளையாடுவதையோ, நடப்பதையோ தவிர்க்கவும்.

வயல் வேலைகள் அல்லது சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபடுவோர் நீண்ட காலணிகள் (Boots) மற்றும் கையுறைகளை அணியவும்.

உடலில் காயங்கள் இருந்தால் நீர் புகாதவாறு மூடி வைக்கவும்..

  • அறிகுறிகள்: கடும் காய்ச்சல், தசை வலி (குறிப்பாக காலின் பின்பகுதி), கண்கள் சிவத்தல்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டலின்படி, வெள்ள நீரில் இறங்குபவர்கள் அல்லது மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் டொக்ஸிசைக்ளின் 200mg (Doxycycline) எனும் ஒரு தடுப்பு மாத்திரையை வாரம் ஒருமுறை உட்கொள்ள வேண்டும்.

  • குறிப்பு: இதனை உட்கொள்ளும் முன் உங்கள் பகுதி PHI அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இது வழங்கப்படுவதில்லை.

5. உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் 

வயிற்றுப்போக்கு மற்றும் ஹெபடைடிஸ் A போன்றவை அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் பரவுகின்றன.

சமைத்த உணவுகளை மூடி வைக்கவும். ஈக்கள் மொய்த்த உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.

உணவு உட்கொள்ளும் முன்பும், மலசலகூடத்தைப் பயன்படுத்திய பின்பும் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவவும்.

  • வயிற்றுப்போக்கு ஏற்பட்டால்: உடனடியாக ஜீவனி (ORS) மற்றும் அதிகளவு திரவ உணவுகளை (கஞ்சி, இளநீர்) உட்கொள்ளவும். நிலைமை மோசமானால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லவும்


6.  கண் மற்றும் தோல் நோய்கள் 

வெள்ள நீர் மற்றும் சேற்றுடன் நீண்ட நேரம் தொடர்பில் இருப்பது பல்வேறு தோல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வெள்ள நீரில் நனைந்த பின் சுத்தமான நீரில் உடலைக் கழுவவும். பூஞ்சை தொற்று (Fungal infections) ஏற்பட்டால் சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரை அணுகவும்.

கண்கள் சிவத்தல், அரிப்பு அல்லது நீர் வடிதல் ஏற்பட்டால் பிறருடன் தொடர்பைத் தவிர்த்து, கண்களைத் தேய்க்காமல் சுத்தமான நீரால் கழுவவும்.


7. உள ஆரோக்கியம் 

பேரழிவுகள் உடலை மட்டுமல்ல, மனதையும் சிதைக்கின்றன. உடைமைகளை இழந்த கவலை, எதிர்காலம் பற்றிய அச்சம் ஆகியவை மன அழுத்தத்தை (PTSD) உருவாக்கலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணர்வுகளை நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியம்.

குழந்தைகள் இக்காலகட்டத்தில் அதிக பயத்துடன் இருக்கலாம். அவர்களைப் பாதுகாப்பாக உணர வைப்பது பெரியவர்களின் கடமை.

தூக்கமின்மை, அதிகப்படியான பயம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், 1926 எனும் தேசிய மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

இறுதியாக

டிட்வா சூறாவளி ஏற்படுத்திய வடுக்கள் மறைய காலம் எடுக்கும். ஆனால், முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் தேவையற்ற நோய் பரவலையும் நாம் தடுக்க முடியும். உங்கள் பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுங்கள்.

நாம் ஒன்றிணைந்து, ஆரோக்கியமானதொரு எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

மேலதிக விபரங்களுக்கு உங்கள் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்


ஆக்கம்: Dr M.B. Mohamed Silmy (MBBS), MOIC- PMCU MAWADIPALLI

pic source- aljazeera


டிட்வா (Ditwah) பேரழிவின் பின்: மீண்டெழுவோம் ஆரோக்கியமாக! டிட்வா (Ditwah) பேரழிவின் பின்: மீண்டெழுவோம் ஆரோக்கியமாக! Reviewed by Lankastudents on 9:54:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.