நீரிழிவு நோயாளிகளை தாக்கும் சிறுநீரக பாதிப்பு - அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்.

நீரிழிவு நோயும் சிறுநீரக பாதிப்பும்
முஹம்மது ஸில்மி (மருத்துவ மாணவன்) 

இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. காரணம் இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும்
பாரதூரமாகவே இருப்பதுமாகும். இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது.




இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் அவதானத்துடன் செயற்பட்டால் தேகாரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது.நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது.

முதலில் நீரிழிவு என்றால் என்ன
என்பது பற்றி சிறிய விளக்கம் ஒன்றை எளிமையான முறையில் பெற்றுக் கொள்வோம்.
எமது இரத்தத்தில் இனிப்புச்சத்து (குளுக்கோசின் அளவு) வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதினாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இக்குளுக்கோசானது நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது. எமது உடல் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோசு எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும். சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்"
(Insulin) எனப்படும் ஓர் ஓமோன் ஆகும். இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள்
(Kidney) குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.
குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும் போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம். அதிகளவு நீர் வெளியேறுவதால் மிதமிஞ்சிய தாகமும் ஏற்படுகிறது.
சிலரின் உடலில் நீரிழிவு நீண்டகாலங்களாகக் காணப்பட்டாலும் கூட நோயாளியின் அறியாத்தன்மை காரணமாக தனக்கு நீரிழிவு உள்ளது என்பதை நோயாளி உணர்ந்து கொள்வதில்லை. இதனால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. 
எனவே நீரிழிவு நோயின் மூலமான அறிகுறிகள் சிலதை நோக்குவோம்.

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.
2 அடிக்கடி தாகம் ஏற்படல்.
3. அசாதாரண பசி ஏற்படல்.
4. உடல் சோர்வாக இருத்தல்.
5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.
6. தலை சுற்றுதல்,மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.
7. கை, கால்களில் விரைப்புத் தன்மை ஏற்படுதல்.
8. தேகத்தில் பருக்களும், கட்டிகளும் தோன்றல்.
9. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் ,கூடிய அழற்சி ஏற்படல்.
10. கண் பார்வை குறைவடைதல்.
11. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும் கூடிய நாட்கள் எடுத்தல்.
12. எளிதில் கோபமடைதல்.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை சிலகாலமாக நீங்கள் அவதானித்தால் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிறுநீர்ப்பரிசோதனை செய்வதன் மூலம் அந்நோய் இருக்கின்றதா?, என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டாக்டரை அணுகி உரிய சிகிட்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும். பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்தலாம். அதாவது, 

முதல் வகை நீரிழிவு நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய், கர்ப்பகால நீரிழிவு நோய், சதையியில் (Pancreases) ஏற்படும் கற்களால் உருவாகும் நீரிழிவு நோய் என்ற அடிப்படையில் நான்கு வகையான நீரிழிவு நோய்களே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை பாதிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் வகை நீரிழிவு நோய் (Type1 diabetes) என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது.இந்த முதல் பிரிவு நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை.
இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள்.மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகளை அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி கலங்கள் , இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக்கால கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை,
இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
முதல் வகை நீரிழிவு (Type1 diabetes) நோயின் குணாதிசியங்கள்
பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது
அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல
இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.
உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.
உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது
 இரண்டாவது வகை (Type2 diabetes)நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.
இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.
இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.
(டைப் II) இரண்டாவது வகை நீரழிவு நோயின் குணாதிசியங்கள்
பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்
அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்
பொதுவாக இது பரம்பரை நோய்
பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.
இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

பார்வை இழப்பு
மாரடைப்பு
சிறுநீரகக் கோளாறு
பக்கவாதம்
கால்களை இழத்தல்
கோமா மற்றும் இறப்பு.

மூன்றாவது வகையான
(ஜெஸ்டேஷனல்) கர்ப்பகால நீரிழிவு நோய்.
கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும் . பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது (டைப்II) இரண்டாவது வகை நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.
நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளி நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது குறைவடைந்தால் அவர் பாராதூரமான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். இது காலப்போக்கில் உடலில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
1. குறைந்த இன்சுலின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவுகளால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைவதனால் மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றலாம்.
2. குறைந்த குருதி விநியோகம் மற்றும் பல காரணங்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் புலனுணர்வு பாதிக்கப்படும்.
3. விழித்திரையில் மாற்றத்தினால் (Retinopathy) கண்வில்லையில் ஏற்படும் மாற்றத்தினாலும் (Cataract) கண்பார்வை இல்லாது போகும் அபாயம் ஏற்படல்.
4. பாலியல் உறுப்புக்கள், சிறுநீரகம், கை, கால், தோல் பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படலாம். பிரதானமாக இந்நோய்களில் Candida எனப்படும் பங்கசு நோய் ஏற்படும்.
5. சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்படலாம் அல்லது இயங்க மறுக்கலாம். குறைந்த குருதி விநியோகம் நரம்புப் பாதிப்புகளால் பிரதானமாக கால்களில் பாதிப்புகள் ஏற்படல். குறைந்த புலனுணர்வால் நடப்பதில் கஸ்டம் ஏற்படுவதுடன் பாதப்பகுதியில் நோயாளர்கள் உணர முடியாமலேயே புண்கள் தோன்றலாம். இவ்வகைப் புண்கள் குணமடையாது போகின் பாதிக்கப்பட்ட கால் பகுதிகள் வெட்டியகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.

நோயைக்கட்டுப்படுத்தும் முறைகள்
1. சில நோயாளர்களுக்கு இந்நோயை உணவுக்கட்டுப்பாடுகளின் மூலமும்.
2. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுடன் மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமும்
3. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுகளுடன் இன்சுலின் ஊசி ஏற்றுதல்; மூலமும் கட்டுபாட்டில் வைத்திருக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள் என புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. .

நீரிழிவு நோய்களுக்காகச் சிகிட்சை பெற்றுக் கொண்டிருப்போர் கவனிக்க வேண்டியவை:
1. வைத்தியரின் ஆலோசனைப்படி உணவுக்கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
2. வைத்திய ஆலோசனைப்படி குளிசையை அல்லது இன்சுலின் ஊசியை ஒழுங்காக எடுக்க வேண்டும்.
3. மருந்து எடுத்து அல்லது ஊசி ஏற்றி அரைமணி நேரத்திற்குள் (30 நிமிடம்) உணவை உட்கொள்ளுதல் வேண்டும்.
4. சில சந்தர்ப்பங்களில் மருந்த எடுத்த பின் உணவு உட்கொள்ளத்தவறினால் அல்லது மேலதிகமாக மருந்தை உட்கொண்டாலோ களைப்பு, பசி, மயக்கம், தலைச்சுற்று, நெஞ்சுப்படபடப்பு, அதிகளவு வியர்த்தல், உடல் குளிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இப்படியான சந்தர்ப்பங்களில் குளுக்கோசு அல்லது வேறு இனிப்பு வகைகள் உடனடியாக உட்கொள்ளல் அவசியமாகும். இதனால் சிறிதளவு இனிப்பு வகைகளோ அல்லது குளுக்கோசோ எந்த நேரமும் உங்களுடன் வைத்திருத்தல் நன்று. (குறிப்பாக இன்சுலின் அதிகளவில் உடலில் ஏற்றிக் கொள்பவர்கள்) மேலும் நீரிழிவு நோயாளிகள் வெளியிடங்களுக்குத் தனியே செல்லும் போது தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதை தெரிவிக்கும் விபரமடங்கிய குறிப்பொன்றை தன்னுடன் வைத்திருத்தல் பாதுகாப்பு மிக்கதாகும்.
5. தினமும் தேகாப்பியாசம் செய்தல் வேண்டும்.
6. உடல் சுத்தத்தைப்பேணல் வேண்டும். பிரதானமாக பாதங்களைச் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் பேண வேண்டும். நீரிழிவு நோயுள்ளவர்கள் தனது கால்களையும், கால் நகங்களையும் தினம் தோறும் அவதானித்து கொள்ளல் வேண்டும்.
7. உணவுக்கட்டுப்பாடின்றி உண்பதன் மூலமோ அல்லது மருந்துகளை ஒழுங்கீனமாக பாவிப்பதன் மூலமாகவோ குருதியில் குளுக்கோசின் அளவு அதிகமாகி வயிற்றுப் புரட்டல், நாவரட்சி, மயக்கம் போன்றன ஏற்படலாம். அப்படி ஏற்படின் உடனடியாக மருத்துவரை நாடல் வேண்டும்.
நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் மிகவும் அவதானமான முறையில் தமது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்வதுடன், உணவு முறைகளையும் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள்
கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த கோதுமை, அரிசி, கேழ்வரகு போன்ற உணவுகளை உண்ணலாம்.
1) பாகற்காய், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், இஞ்சி, காலிபிளவர், சுரைக்காய், சௌசௌ, வெள்ளரிக்காய், கத்திரிக்காய், பீரக்கங்காய், வாழைப்பூ, புதினா, வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ், அவரை, கொத்தமல்லி, வெண்டைக்காய், வாழைத்தண்டு, கருவேப்பிலை, அனைத்துக் கீரை வகைகள் போன்ற பச்சை காய்கறிகளை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
வாழைக்காய், அனைத்து கிழங்கு வகைகள், இனிப்பு பதார்த்தம், சர்க்கரை, வெல்லம், கல்கண்டு, தேன், குளுக்கோஸ், கருப்பட்டி, கேக், சாக்லெட், ஐஸ்க்ரீம், ஜாம், இனிப்பு நிறைந்த பிஸ்கெட், பால்கோவா, ஜெல்லி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா, பாட்டில்களில் வைத்து விற்கப்படும் அனைத்து பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள், வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில், எண்ணெய் அதிகளவில் சேர்க்கப்பட்ட ஊறுகாய், வறுத்த மற்றும் பொரித்த உணவு வகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா, மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
மது, சிகரெட், புகையிலை, பொடி போடுதல் ஆகியவற்றையும் நிறுத்த வேண்டும். உடற்பயிற்சியும், 20 நிமிட நடைபயிற்சியும் செய்யலாம். ஆனால் காலி வயிற்றிலோ, உணவு உண்டவுடனேவோ உடற்பயிற்சி செய்யக் கூடாது.

diabetes வராமல் எவ்வாறு தடுக்கலாம்?
1) இது பரம்பரையாகவும் வரலாம். நம் உணவு பழக்கத்தை கட்டுபடுத்துவதன் மூலமாகவும் diabetesசை தவிர்க்கலாம்.
2) regular ஆக excercise செய்ய வேண்டும்.
3) excercise செய்ய முடியாதவர்கள் daily atleast 30 நிமிடம் walking ஆவது செல்லவேண்டும்.
4) அடிக்கடி blood test செய்து sugar அளவை check செய்ய வேண்டும்.
பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகள், அறியாமையால், 'எனக்கு சர்க்கரை அளவு கட்டுப் பாட்டில் இருக்கிறது. ஒரு தடவை 180 சதவீதம் ஆகியது. உணவு, உடற் பயிற்சியால் சர்க்கரை 140 ஆகக் குறைத்து விட்டேன்' என்பர். இவரது பரிசோதனை அறிக்கையைப் பார்த் தால், மூன்று மாதத்திற்கு முன் எடுத்த பரிசோதனையாக இருக்கும்.
அதுவும், 'ரேண்டமாக,' சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்து, பரிசோதனை செய்து இருப்பார். பரிசோதனை, சர்க்கரையின் மூன்று மாத கட்டுப் பாட்டைக் காட்டும் பரிசோதனை; இதை செய்து இருக்க மாட்டார்கள்.
'உங்கள் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது' என்று கூறினால், 'வீட்டில் விசேஷம்; நிறைய இனிப்பு பலகாரங் கள் சாப்பிட்டேன். அதனால், தான் சுகர் அதிகமாக உள்ளது' என்பர்.
ஒருமுறை சர்க்கரை அளவு 120 முதல் 140 வந்து விட்டால், தனக்கு சர்க்கரை வியாதி குணமாகிவிட்டது என்று நினைத்து கொண்டு, மருந்துகளை சாப்பிட மாட் டார்கள். ஒரு நாளைக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 18 முறை ஏறி இறங்குவது, இவர்களுக்கு தெரியாது. தனால் தான் வெறும் வயிற்றில் சுகர் பரிசோதனை, சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து, சுகர் பரிசோதனை செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை, இந்த பரிசோதனை செய்யவேண்டும். கட்டாயம் மூன்று மாதம் ஒருமுறை, பரிசோதனை செய்யவேண்டும்.
சாப்பிடும் முன் வெறும் வயிற்று சர்க்கரை, 90 சதவீதம்; சாப்பிட்ட பிறகு 130 சதவீதத்திற்குள், அதாவது, 40 சதவீத வித்தியாசத்தில், கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல் இருந்தால் நிச்சயம் இதய நோய் வரலாம்.
சில சமயங்களில் பொருத்த மில்லாத மருந்துகளால் கூட, இந்த சர்க்கரையின் அளவு வித்தியாசம் 40க்கு மேல் போக வாய்ப்புள்ளது.
இந்த வித்தியாசம் அதிகமாவதால், ரத்தக் குழாய் பாதிப்பு ஏற்பட்டு, மூளைக்கு செல்லும் சிறிய மற்றும் பெரிய ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, பக்கவாதம், உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வலி ஆகியவை ஏற்படும்.
படுக்கையிலிருந்து எழுவது, குளிப்பது, உடை மாற்றுவது, உண்பது, நடப்பது, வேலைக்கு செல்வது இதுபோன்ற வேலைகள் பாதிக் கப்பட்டு, பயனற்று படுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மருத்துவம் பார்க்க முடியாத நிலை. வீடு, நிலம், நகை விற்று குடும்பம் அல்லல்படுவதைப் பார்க்க சகிக்க முடியவில்லை. அதுவும், இரண்டாம் வகை இதய பாதிப்பான, 'கார்டியோ மையோபதி'க்கு செலவு கொஞ்சம் நஞ்சமல்ல. இதனால், குடும்ப உறுப் பினர்கள் பொருளாதார சிதைவு, மனச்சிதைவுக்கு உட்படுகின்றனர். இதை நினைக்க பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கிறது.
இந்த நிலையைப் பயன்படுத்தி, பொருள் ஈட்ட, ஒரு மருத்துவ கும்பல் உள்ளது. மனித நேயத்தை மறந்து, 'பணம் கொடு, 'ட்ரீட்' செய்கிறேன்' என்ற நிலைக்கு, மருத்துவ சேவை வந்துவிட்டது.

சர்க்கரை நோயால் சிறுநீரகமும் பாதிக்கப்படும் என்று சொல்வது ஏன்?
இதுவும், 'மைக்ரோ ஆஞ்சியோபதி' பாதிப்பு தான். சிறுநீரகத்தில் உள்ள நுண் ரத்தக்குழாய் அடைபட்டு, 'நெப்ரான்' என்ற சிறுநீரகத்தின் உயிர்நாடியை பாதித்து விடுகிறது. இதை ஆங்கிலத்தில், 'டயபடிக் நெப்ரோபதி' என் றழைப்பர். எந்த நேரத்தில், யாருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என்பதை முன் கூட்டியே சொல்ல முடியாது. இந்த, 'நெப்ரோபதி'யால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, யூரியா, கிரியாட்டின், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு உயர்ந்து, மூச்சு முட்டல், படபடப்பு ஏற்பட்டு, 'டயலிசிஸ்' செய்ய வேண்டிய நிலைக்கு நோயாளி தள்ளப்படுவார்.
இறுதியில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும். சிறுநீரகத்தை உடல் ஏற்றுக் கொள்வதற் காக, ஊசி போட வேண்டும்.
சர்க்கரை வியாதி ஏற்பட்டால் பாதிப்பிற்கு உள்ளாகிற முதல் உறுப்பு சிறுநீரகம்தான்.
எப்படியென்றால் முதலாவதாக, இரத்தம் சுத்திகரிக்கப்படும் போது சிறுநீரகத்தில் இருந்து மிகக் குறைந்த அளவே புரதத்சத்து வெளியேறும். இதனால் உடல் சமச்சீர் நிலை குறையும். இதை துவக்க நிலையிலேயே கண்டறிந்தால் மைக்ரோ ஆல்புமின் பரிசோதனையில் கண்டறிந்து குணப்படுத்திவிடலாம்.
இரண்டாவதாக, சிறுநீரில் புரதச்சத்து அதிகமாக வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் பிரியும். மிகை இரத்த அழுத்தம் ஏற்பட்டு பிற உறுப்புகளும் பாதிக்கலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளில் இந்த நிலை வெளியே தெரியவரும். இதைத் தொடர்ந்து சிறுநீரில் அதிகமான புரதம் வெளியேறிவிடுவதால் உடல் பருத்தும், கைகால்கள் வீங்கியும் காணப்படும்.
தவிர, இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீர்ப் பிரித்திகள் அல்லது சிறுநீர் வடிகட்டிகள் அதை சரியாக சுத்திகரிக்காமல் விட்டுவிடுகின்றன. இதனால் கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துவிடுகின்றன. இந்த நிலையில்தான் நிறைய பேருக்கு டயாலிஸ் செய்ய வேண்டியிருக்கிறது. கடைசி நிலையாக சிறுநீரகம் செயலிழந்துவிடும். சர்க்கரையால் பாதிக்கப்பட்ட நபர், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு சிறுநீரகத்திற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் அவரது சிறுநீரகம் செயலிழந்துவிடும்.
சிறுநீரகம் எப்படி செயலிழக்கிறது?
சிறுநீரகம் இரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையைச் செய்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், சர்க்கரை நோயினால் கூடுதல் பணியைச் செய்ய வேண்டியிருப்பதால் நாளடைவில் சிறுநீரகம் தளர்வடைந்து சரியாக சுத்திகரிப்புப் பணியைச் செய்ய இயலாமல் போகிறது.
40 விழுக்காட்டினருக்கு சர்க்கரை வியாதியாலும், 20 விழுக்காட்டினருக்கு இரத்த அழுத்தம் காரணமாகவும் நிரந்தரமாக சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுகிறது.

எப்படி சர்க்கரை சிறுநீரக பாதிப்பு தடுப்பது?
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உங்களுக்குரிய சரியான அளவுக்கு மிக அண்மையில் உள்ளவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உரிய சரியான அளவு என்ன என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஆகார மாற்றங்கள், உடற்பயிற்சி, மருந்துகள் தேவைப்பட்டால் இன்சுலின் ஊசி ஆகியன இதற்கு தேவைப்படலாம். சர்க்கரை கட்டுப்பட வேறு என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் தயங்காமல் கேளுங்கள்
உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அதனை குறைப்பதற்கான வழி முறைகளை மருத்துவரை கேட்டு பின்பற்றுங்கள். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சரியான இரத்த அழுத்த அளவு 130/80 க்கு கீழ் அதற்கு தேவையான மருத்துகள் ஆகார மாற்றங்கள் இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்றவும். சிறுநீரக பாதிப்பு ஆரம்பத்தில் தொந்திரவாக வெளியே தெரியாது. சிறுநீரக பாதிப்பு வெளியே தெரியும் போது பெரும்பாலும் அது முழுமையாக சரிசெய்ய முடியாத அளவு முன்னேறியிருக்கக் கூடும்.

  சிறுநீரக பாதிப்பின் பாதிப்புகள் கீழ்க்கண்டபடி வரலாம்.

1. சிறுநீரின் அளவு குறைதல், கை, கால், முகம் வீக்கம்.
2. சிறுநீரில் இரத்த நிறம்.
3. இரத்த அழுத்தம் மேலும் அதிகரித்தல்.
சிறுநீரக செயலிழப்பின் வெளிப்பாடுகள்
சோர்வு, இரத்தச் சோகை, பசி, ருசியின்மை, வாந்தி, விக்கம், மூச்சுத் திணறல், நிறம் கறுத்தல் என பலவகையில் வெளிப்படலாம். முக்கியமாக சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு திடீரென இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரை குறைந்தால் சிறுநீரகத்தின் வேலைத் திறனை பரிசோதித்து பார்த்து கொள்ள வேண்டும்.
வேறு உறுப்புகளின் பாதிப்புகள் உதாரணமாக நரம்பு பாதிப்பு - கை, கால் உணர்ச்சி குறைவு, குத்தல் வலி, கண் பாதிப்பு - கண் பார்வை குறைவு, இருந்தால் சிறுநீரக பாதிப்பும் இருக்க வாய்ப்புகள் அதிகம் கண்டிப்பாக சிறுநீரகத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள். எனவே சிறுநீரக பாதிப்பு சம்பந்தப்பட்ட எந்த தொந்திரவும் இல்லாவிட்டாலும் உங்கள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை வருடத்திற்கு ஒரு முறையெனும் பரிசோதித்து அறிந்து கொள்ளுங்கள். எளிய சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் என்ற கழிவு உப்புகளின் அளவு ஆகியன போதும்.
சிறுநீரகத்திலோ சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை இவற்றிலோ கிருமித் தாக்குதல் வந்ததற்கான 

கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

1. சிறுநீர் கழிக்கையில் வலி, எரிச்சல்
2. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருத்தல்
3. கலங்கலான அல்லது சிவப்பு நிறத்தில் சிறுநீர் கழித்தல், சிறுநீரில் துர்வாடை
4. காய்ச்சல், குளிர் நடுக்கம்
5. சிறுநீரகங்கள் அமைந்துள்ள முதுகுப் புறத்தில் விலா எழும்புகளுக்கு கீழ் உள்ள பகுதியில் வலி
6. சிறுநீரின் அளவு குறைந்து கை, கால், முகம், விக்கம் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
கண்கள்?
கண் ரெட்டினாவிலுள்ள ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, கண்ணொளி குறையும். பார்வை இழக்க நேரிடும்.
சர்க்கரை சிறுநீரக பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இது எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகின்றது?
மருத்துவர் மேற்கூறிய தொந்தரவுகள் இருந்தாலோ அல்லது இல்லாவிட்டாலும் சிறுநீரகத்தின் ஆரோக்யத்தை உறுதி செய்ய. சிறுநீர், இரத்தத்தில் யூரியா, கிரியோட்டினின் போன்ற கழிவு உப்புகளின் அளவு ஆகிய சில பரிசோதனைகளை செய்வார். சிறுநீரில் கிருமி இருப்பதாக சந்தேகப்பட்டால் கல்ட்சர் (Culture) எனப்படும் சிறுநீரில் உள்ள கிருமிகளை சோதனைச் சாலையில் வளர்த்தி அவற்றை கண்டு பிடிக்கும் பரிசோதனையையும் செய்ய வேண்டிவரும் சிலருக்கு அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) எனப்படும் ஸ்கான் சிறுநீரகத்திற்கு தேவைப்படும். சிலருக்கு 24 மணி நேர சிறுநீர் பரிசோதனைகள் தேவைப்படும். சர்க்கரை சிறுநீரக பாதிப்பிலும் பல நிலைப்படிகள் உண்டு.
முதல் நிலை பாதிப்பு என்பது சிறுநீரில் மிகக் குறைந்த அளவு அல்புமின் (Albumin) எனப்படும் புரதச்சத்து வெளியாதல். இதனை மைக்ரோ அல்புமினூரியா (Microalbuminuria) என்றும் அழைப்பர்.
இரண்டாம் நிலையான மேக்ரோஅல்புமினூரியா (Macroalbuminuria) அல்புமின் அதிக அளவில் வெளியாகின்றது.
மூன்றாம் நிலையில் சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure) இரத்ததில் யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவு உப்புகளில் அளவு அதிகரித்தல்.
நான்காம் நிலை முற்றிய சிறுநீரக செயலிழப்பு (End Stage Kidney Failure) இந்த நிலையில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உயிர் காக்க அவசியம்.
மைக்ரோஅல்புமினூரியா நிலையிலும் பல சமயம் மேக்ரோ அல்புமினூரியா நிலையிலும் சரியான சிகிச்சை மூலம் சிறுநீரக பாதிப்பை முழுவதும் சரி செய்யலாம். ஆனால் சிறுநீரக செயலழிப்பு என்றானதும் முழுவதும் சரி செய்வது என்பது இயலாது என்றாலும் இந்நிலையிலும் சிறுநீரகம் கெடும் வேகத்தை பெருமளவு கட்டுப்படுத்தி முற்றிய சிறுநீரக செயலிழப்பு நிலையை பல வருடங்களுக்கு தள்ளி போட இயலும் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த நிலையிலும் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் பல காலம் நலமாக உயிர் வாழ முடியும்.
சர்க்கரை வியாதி வேறு வழிகளிலும் சிறுநீரகத்தை பாதிக்க முடியும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் குழாய்களில் கிருமித்தாக்குதல் வரவும் வந்தால் மிக விரைவில் சிறுநீரகம் அதிலிருந்து உடல் முழுக்க பரவி உயிருக்கே ஆபத்தாக மாறவும் வாய்ப்புகள் அதிகம் எனவேதான் இதனை ஆரம்பத்திலேயே கவனித்துக் கொள்வதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. சிறுநீரகத் தாரையில் கிருமி தாக்கத்தின் அறிகுறிகள் உள்ள போது உங்களுக்கு சிறுநீர் கல்சர் மற்றும் சிறுநீரக ஸ்கான் முதலியன தேவைப்படும்.
சர்க்கரை வியாதியின் இரத்தததில் கொழுப்பு சத்துகளை கட்டுப்படுத்தாவிட்டால் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து பலவிதமாக வெளிப்படலாம். இதயத்தின் இரத்தக் குழாய்கள் அடைபடுவதால் மாரடைப்பும், மூளையின் இரத்தக் குழாய்கள் அடைபடுவதால் வாத நோயும் எல்லோரும் நன்கு அறிந்தவை. சிறுநீரகத்தின் இரத்தக் குழாய்கள் அடைபடுவதால் சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம் என்பது எல்லோருக்கும் தெரியாதது. சிறுநீரக ஸ்கானின் இதற்கான அறிகுறிகள் தென்படலாம். அவ்வாறெனில் சிறுநீரக மருத்துவர் சிறுநீரக இரத்தக் குழாய்களை ஆராயும் ஒரு சிறப்பு ஸ்கானுக்கு பரிந்துரைக்கலாம்.
சர்க்கரை சிறுநீரக பாதிப்பு உள்ளதாக உறுதி செய்யப்பட்டால் . இதை குணப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ மருந்துகள் உள்ளனவா?
சர்க்கரை சிறுநீரக பாதிப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை வைத்து சிகிற்சைகளும் மாறும் இதைப்பற்றி சிறுநீரக மருத்துவர் தெளிந்துரைப்பார். சர்க்கரை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்க மற்ற உறுப்புகளிலும் பாதிப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம் உதாரணமாக கண், இதயம், நரம்புகள், இரத்தக் குழாய்கள். அப்படியிருந்தால் அவற்றையும் பரிசோதித்து அதற்குண்டான மருத்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
1- ஆம் நிலை - மைக்ரோஅல்புமினூரியா மற்றும்
2-ஆம் நிலை - மேக்ரோஅல்புமினூரியா ஆகியன குணப்டபடுத்தக்கூடியவை. இவர்களுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் ஒரு வகை பிரத்யேக வகையான ப்ரில் என முடியும் அல்லது ர்டான் என முடியும் பெயர் கொண்ட சில மருந்துகள் சிறுநீரில் அல்புமின் கசிவதை தடுத்து சிறுநீரகத்தை பாதுகாக்க வல்லவை. சர்க்கரை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்க்கு இந்த மருத்துகள் எல்லாவற்றையும் விட உகந்தவை. சிலருக்கு பல காரணங்களால் இந்த வகை மருந்துகள் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். என்றால் வேறு வகை இரத்த அழுத்த மருந்துகளை சிறுநீரக மருத்துவர் அறிவுறுத்தக் கூடும்.
3- ஆம் நிலையில் சர்க்கரை வியாதிக்கு உள்ள ஆகார மாற்றங்கள் தவிர சிறுநீரக செயலிழப்பிற்கு என்று மேலும் சில ஆகார மாற்றங்கள் செய்ய வேண்டி வரும் உதாரணமாக சாப்பாட்டில் புரதச்சத்தை குறைத்துக் கொள்வது, பொட்டாசியம், பாஸ்பரஸ் எனப்படும் சில தாது உப்புகள் உள்ள உணவுப் பொருட்களை குறைத்துக் கொள்வது. உங்கள் நோயின் தீவிரம் உடல் எடை இரத்த அழுத்தம், உடலின் தண்ணீர் சேர்ந்து வீக்கம் ஆகிய பலவற்றை பொறுத்து இந்த ஆகார மாற்றங்கள் மாறுபடும் உங்களுக்கு சரியான உணவு முறைகளை சிறுநீரக மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இவற்றை மேற்கொள்ளுவதனால் சிறுநீரகம் கெடும் வேகத்தை குறைத்து சிறுநீரகங்களை பலகாலம் உழைக்க வைக்கலாம்.
4-ம் நிலையான முற்றிய சிறுநீரக செயலிழப்பில் உங்களுக்கு பழுதடைந்த சிறுநீரகத்திற்கு மாற்றான சிகிச்சை தேவைப்படும் அதாவது சிறுநீரகத்தின் வேலைக்கு மாற்றாக செயற்கை சிறுநீரக இயந்திரம் (ARTIFICAL KINDEY) கொண்டு டயாலிசிஸ் (DIALYSIS) எனப்படும் இயந்திரத்தின் மூலம் இரத்த சுத்திகரிப்போ அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையோ (KINDEY TRANSPLANTATION) தேவைப்படும்.

சர்க்கரை சிறுநீரக வியாதியின் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து கொள்ளுவதற்கான வழிமுறைகள் என்னென்ன?
ஆரம்ப கட்ட பாதிப்புகள் நிலை-1 & நிலை-2
1. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
2. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள்ள வைத்திருக்க வேண்டும் (மிகச் சரியான அளவு (130/85க்கு கீழ்) இதற்கு தகுந்தபடி உணவுக் கட்டுப்பாடு, மருந்துகள் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. இரத்தத்தில் கொலெஸ்டிரால் 200க்கு கீழ் வைத்திருக்க வேண்டும். இதற்கு தகுந்தபடி உணவுக் கட்டுப்பாடு, மருந்துகள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்து கொள்ள வேண்டும்.
4. சிறுநீரகத்திற்கு ஊறு விளைவிக்கும் வலி மருந்துகள், நாட்டு மருந்துகள் ஆகியவற்றை நீங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பொதுவாக எந்த மருந்தினாலும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்
5. புகைப்பிடித்தல் மற்றும் புகையிலையை எந்த ரூபத்திலும் உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.
6. கை, கால், முகம் வீக்கம் இல்லாத போது ஓரளவு நன்கு தண்ணீர் குடித்து நல்ல சிறுநீர் ஓட்டம் உள்ளபடி பார்த்துக் கொள்ளவேண்டும். அதனால் சிறுநீரில் கிருமிகளால் வரும் வாய்ப்பை குறைக்கலாம். உடலில் வீக்கம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தண்ணீரின் அளவை அமைத்துக் கொள்ளுங்கள்.
7. சிறுநீர் கழிக்கையில் வலி, எரிச்சல், காய்ச்சல் அல்லது வேறு எந்த வகையிலும் காய்ச்சல் என்றாலும் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
8. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் முறையான இடைவெளிகளில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த கட்ட பாதிப்பு-நிலை-3
இந்த நிலையில் மேற்கூறிய அனைத்து வழிமுறைகளும் பொருந்தும். இதனோடு கீழ்க்கண்ட வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
1. இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2க்கு மேல் ஆகும் போது உணவில் புரதத்தின் அளவை குறைத்துக் கொள்ள உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கக்கூடும். இதனால், உணவு முறையில் மேலும் சில மாற்றங்கள் சேர்க்கப்படும்.
2. ஏற்கனவே எடுத்துக் கொண்டுள்ள மருந்துகள் சிறுநீரக செயலிழப்பு உள்ளதால் பொருந்தாததாக ஆகக் கூடும். சிறுநீரக மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகள் சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3. சர்க்கரை வியாதியினால் வேறு உறுப்புகள் பாதிப்பு உள்ளதா என்பதை(இதுவரை பார்த்திருக்கா விட்டால்) கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக கண், இதயம்.
4. கிரியேட்டினின் அளவு அதிகரிக்கும் போது இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிப்பால் இரத்தச் சோகை, எலும்புகள் பலவீனமாதல் ஆகியவற்றை தவிர்க்க எரித்ரோபோய்ட்டின் ஊசி, வைட்டமின்கள், இரும்புச் சத்து, கால்சியம் மாத்திரை ஆகியனவற்றை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்க கூடும்.
கடைநிலை பாதிப்பு-நிலை-4
இந்நிலையில் இனி சீக்கிரத்தில் சிறுநீரக மாற்று சிகிச்சை (டயாலிசிஸ் அல்லது சிறுநீரக அறுவை சிகிச்சை தேவைப்படலாம்). இதற்கான ஏற்பாடுகளை சிறுநீரக மருத்துவர் இவை தேவைபடுவதற்கு குறைந்தது 1 வருடம் முன்பே பரிந்துரைப்பார். உதாரணமாக.
1. மஞ்சல் காமாலை நோய் வராதிருக்க தடுப்பு ஊசி.
2. டயாலிசிஸ் சிகிச்சையின் போது இரத்தத்தை சுத்தம் செய்ய உடலில் இருந்து இரத்தத்தை எடுக்க திரும்ப செலுத்த ஒரு பெரிய செயற்கை இரத்தக் குழாயை (AVFISTULA) கையில் உருவாக்குதல்.
3. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார் என்றால் சிறுநீரக தானம் அளிப்பவர்களின் தகுதியை பரிசோதித்து கண்டு பிடித்து வைத்தல்.
4. கடைசியில் சிலருக்கு சிறுநீரக பாதிப்பு முற்றி சிறுநீரகங்கள் முற்றிலும் செயலிழந்த பின்னர் கூட பயப்படத் தேவையில்லை. அவர்களின் உடல் தகுதி, சிறுநீரக தானம் தர உறவினர், நண்பர் உள்ளனரா என்பதைப் பொறுத்து டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பல்லாண்டுகள் நல்ல ஆரோக்யத்தோடு உயிர் வாழ முடியும்.
வயது வித்தியாசம், இன்றி தயவு தாட்சண்யம் கூட காட்டாது நீரிழிவு நோய் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது.இன்சுலினை கண்டுபிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்" என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின்" பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முதன் முதலில் இது 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர் உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பிரச்சாரங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் ஆகிய தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் 36 கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி) பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1) இந்தியா 2) சீனா 3) அமெரிக்கா 4) இந்தோனேசியா 5) ஜப்பான் 6) பாகிஸ்தான் 7) ரஷ்யா 8) பிரேஸில் 9) இத்தாலி 10) பங்களாதேஷ் என்பனவாகும்.
முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் தற்போது சுமார் 2 கோடியே 50 இலட்சத்திலிருந்து 3 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2 கோடிப் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர் என்றும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு நோயைப்பற்றி தெரிந்து கொள்ளாதோர் இந்தியாவில் மாத்திரமல்லாமல் மூன்றாம் உலக நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகிறது. அது மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் வேண்டியது இன்றியமையாதது.


Source- mudunekade. blogspot.com (Indianla website.)

நீரிழிவு நோயாளிகளை தாக்கும் சிறுநீரக பாதிப்பு - அனைவரும் அறிந்து கொள்ளுங்கள். நீரிழிவு நோயாளிகளை தாக்கும் சிறுநீரக பாதிப்பு - அனைவரும் அறிந்து கொள்ளுங்கள். Reviewed by Lankastudents on 11:45:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.