குழந்தைகளை பயமுறுத்தும் மன சுழற்சி நோய் (Obsessive Compulsive Disorder - OCD)
மன சுழற்சி நோய் (Obsessive Compulsive Disorder - OCD)
குழந்தைகளைப் பாதிக்கும் உணர்ச்சி மற்றும் நடத்தை மனநலப் பிரச்னைகளில், மன சுழற்சி நோயும் ஒன்று. இந்த மனநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்கள் பிரச்னையை மனதுக்கு உள்ளேயே வைத்து கஷ்டப்படுவார்கள். இப்படி ஒரு பிரச்னை தங்கள் குழந்தைக்கு இருக்கிறது என்றே பெற்றோருக்கு தெரியாது.
பொதுவாக குழந்தைக்கு 7-12 வயது இருக்கும்போது இந்த மனநோய் தாக்குகிறது. சென்ற இதழில் பார்த்த பதற்றக் கோளாறுகளைப் போலவே, இக்கோளாறு, குழந்தைகளை மட்டுமல்ல... பெரியவர்களையும் அதிக அளவில் பாதிக்கிறது. ஒ.சி.டி. குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
ஒ.சி.டி.யின் தன்மைகள்
நம் எல்லோருக்குமே சில தருணங்களில், தொல்லை தரும் சிந்தனைகள் ஆட்கொள்வதுண்டு. ஆனால், ஒ.சி.டி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்கள் / செயல்பாடுகளின் தன்மை வேறுபட்டிருக்கும்.ஒ.சி.டி. உள்ள குழந்தைகளுக்கு அர்த்தமற்ற / காரணமே இல்லாத வேதனைப்படுத்தும் / வதைக்கும் எண்ணங்கள் / பிம்பங்கள் (Obsessions) திரும்பத் திரும்ப அவர்களின் கட்டுப்பாடின்றி வந்துகொண்டே இருக்கும்.இந்த எண்ணங்கள் / பிம்பங்கள் அவர்களுக்கு பெருத்த பதற்றத்தை / பயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அந்த எண்ணங்கள், அன்றாட வாழ்க்கையில் உள்ள பிரச்னை குறித்து அவ்வளவாக இருக்காது. தீங்கு / ஆபத்து / அசுத்தம் சம்பந்தப்பட்ட தவறான / எதிர்மறையான பதற்றத்தை விளைவிக்கும் எண்ணங்களே அவர்களுக்கு வரும்.
அப்படிப்பட்ட எண்ணங்கள் ஏன் வருகின்றன? அப்படித்தான் எல்லோருக்கும் இருக்குமா? இது கூட அவர்களுக்குத் தெரியாது. இவ்வித எண்ணங்களை சமாளிக்க எவ்வளவோ முயற்சி செய்தாலும் எளிதில் அதை விட்டு மீள முடியாது. இவ்வகை எண்ணங்கள் ஏற்படுத்தும் பதற்றம், இவர்களைக் கட்டாயமாக சில அவசர நடவடிக்கைகளில் / செயல்பாடுகளில் (Compulsions) ஈடுபடத் தூண்டும்.
இதன்மூலம், தொடர் எண்ணங்களிலிருந்து விடுபடலாம் என இவர்களும் இத்தகைய 'அர்த்தமற்ற / முட்டாள்தனமான' செயல்பாடுகள் எனத் தெரிந்தும், அதில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள் (எ-டு. கையைக் கழுவுவது, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப செய்வது). இதன் மூலம் கெட்டது நடப்பதை கட்டுப்படுத்தி விட்டதாகவும், தன்னைச் சுற்றி எல்லாம் சரியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாக உணர்வார்கள். அப்படி ஈடுபடும்போது, எண்ணங்கள் தரும் பதற்றத்திலிருந்து சற்றே விடுதலை கிடைத்தது போல உணர்வார்கள். அது தற்காலிகமான ஒன்றே.
ஏனெனில், மறுபடியும் அப்படிப்பட்ட எண்ணங்கள் அவர்களைத் தாக்கும். அதனால், திரும்பத் திரும்ப, கட்டாயத்தின் பெயரில் சில செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள்.இவ்வகை எண்ணங்களையும் / செயல்பாடுகளையும் நிறுத்த நினைத்தாலும், ஏதோ பெரிய கெட்டது நடந்து விடக்கூடும் என்ற பீதி / பதற்றத்தினால், அதிலேயே ஆழ்ந்திருப்பார்கள்.ஒ.சி.டி. உள்ள குழந்தைகளுக்கு, எப்போதுமே விழிப்புநிலையில் இருப்பது போலே இருக்கும். இவர்களால் தளர்வாகவோ, ஓய்வாகவோ உணர முடியாது.
இது தீவிரமாகும் போது, தினசரி வாழ்க்கையையும் நேரத்தையும் சந்தோஷத்தையும் வெகுவாக பாதிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் இவர்களின் செயல்பாடுகள் வித்தியாசமாகத் தெரியாது. ஏனெனில், இவர்கள் முடிந்த மட்டும் பிறருக்குத் தெரியாமல்தான் இத்தகைய கட்டாய செயல்பாடுகளில் (Compulsions) ஈடுபடுவார்கள். பெரும்பாலும், அதைப் பார்ப்பவர்கள், குழந்தையை கேலி செய்வார்கள். அல்லது 'குழந்தையின் சுபாவமே அப்படித்தான்' என நினைத்துக் கொள்வது வழக்கம்.
விளைவுகள்
ஒ.சி.டி. கோளாறானது குழந்தையின் தினசரி வாழ்க்கையை மிகவும் பாதிக்கிறது. எளிதில் செய்து முடிக்கக்கூடிய விஷயங்களுக்கு (குளிப்பது, வீட்டுப்பாடம் செய்வது...) இவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், வேறு எதற்குமே நேரமிருக்காது.
இதனாலேயே, எளிதில் சோர்வும் அடையக் கூடும். சந்தோஷம் தரக் கூடிய விஷயங்களான படம் பார்ப்பது, சுற்றுலா செல்வது போன்ற எல்லா விஷயங்களிலும், சில கோட்பாடுகளான சடங்குகளை (Rituals) பின்பற்றி செய்வதால், இவர்களால் எதையுமே ரசிக்க முடியாது. எந்நேரமும் தங்களை வதைத்துக் கொண்டே இருப்பார்கள்.
கட்டுப்படுத்த முடியாத எண்ணங்களால், குற்றவுணர்ச்சி / விரக்தி அடைவது வழக்கம். எண்ணங்களின் கொரத் தன்மையினால் (எ.டு: பாலியல் / வன்முறை), தங்களைப் பற்றியே தவறாக நினைத்து, அவமானமாகக் கருதுவதும் உண்டு. தொடர்ந்து வரும் எண்ணங்களினால், இவர்களால் சரியாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தவும் முடியாது.
அறிகுறிகள்
பொதுவான மனவோட்டங்கள் (Obsessions)
1.அழுக்கு / கிருமி பற்றிய பயம்
2.பிறருக்கு தீங்கு விளைவித்து விடுவோமோ என்கிற பயம்
3.ஏதேனும் தவறு செய்து விடுவோமோ என்கிற பயம்
4.சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயத்தில் ஈடுபட்டு தர்மசங்கடம் ஆகிவிடுமோ என்ற பயம்
5.தாங்கள் அசுத்தமாக / அழுக்காகிவிடுவோமோ என்ற பயம்
6.எல்லாம் தன்னைச் சுற்றி ஒழுங்காக / முறையாக / மிகச் சரியாக இருக்க வேண்டுமென்ற தேவை
7.கடவுள் / மதம் குறித்த தொடர் எண்ணவோட்டங்கள்
8.வியர்வை, மலம், சிறுநீர் பற்றிய சிந்தனை
9.அதிர்ஷ்ட / துரதிருஷ்ட எண்கள் பற்றிய சிந்தனை
10.பாலியல் / வன்முறை / பாவ சம்பந்தப்பட்ட வக்கிர எண்ணங்களை நினைத்து பயம்
11.தங்களுக்கோ / உறவினர்க்கோ (பெற்றோர், உடன்பிறந்தோர்) தீங்கு / உடல்நலக் கேடு வந்துவிடுமோ என்கிற பயம்
பொதுவான செயல்பாடுகள் (Compulsions)
1.கை கழுவுவது, குளிப்பது, பல் துலக்குவது போன்ற தினசரிச் செயல்பாடுகளை செய்யும்போது சில முறைகளை வரிசையாக கடைப்பிடித்தல். (எ.டு: திரும்பத் திரும்ப கையைக் கழுவுவது, குளிக்கும் போது சில விஷயங்களை வரிசைப்படுத்திச் செய்வது, குளியலறையைச் சுத்தப்படுத்தி பிறகே குளிக்க ஆரம்பித்தல்...)
2.வீட்டுப் பாடம் செய்யும் போது, திரும்பத் திரும்ப எழுதி அழித்து, திரும்ப எழுதுவது; படிக்கும் போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடிக்கோடிடுவது...
3.வீட்டுப்பாடம் சரியாக செய்துவிட்டோமா என திரும்பத் திரும்ப சரிபார்ப்பது, கதவை சரியாக மூடிவிட்டோமா என திரும்பத் திரும்ப சோதித்துப் பார்ப்பது...
4.தொட்டுத் தொட்டுப் பார்ப்பது. (எ.டு: தூங்கும் முன்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டில், பக்கத்தில் இருக்கும் பொருள் போன்றவற்றைத் தொட்டுப் பார்ப்பது)
5.பொருட்களைக் குறிப்பிட்ட விதத்தில் சீராக வரிசைப்படுத்துதல்
6.சத்தமாகவோ / மனதுக்குள்ளோ எண்ணுவது (எ.டு: சாலையில் வாகனங்களைப் பார்த்தால், அதிலுள்ள எண்களை கட்டாயமாக கூட்டிப் பார்ப்பது...)
7.குறிப்பிட்ட வார்த்தைகள், சொற்றொடர்கள் அல்லது பிரார்த்தனையைத் திரும்பத் திரும்ப சொல்வது...
8.நோய் தொற்றுக்கு பயந்து கை குலுக்க மறுப்பது மற்றும் கதவு கைப்பிடியைத் தொடாமலிருப்பது...
9.தேவையில்லாத பல பொருட்களை துறக்க மனம் இன்றி சேமித்து வைப்பது (எ.டு: பழையப் பொருட்கள், பத்திரிகை, பழைய ஆபரணங்கள்...)
10.திரும்பத் திரும்ப வரும் சில எண்ணங்கள், வார்த்தைகள் / பிம்பங்கள் பற்றி கட்டாய சிந்தனையால் தூங்க முடியாமலிருத்தல்...
காரணிகள்
ஒ.சி.டி.க்கான சரியான காரணி இதுவரைக் கண்டறியப்படவில்லை, எனினும், சில காரணங்கள் வல்லுநர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மூளைக்குச் செய்தியை எடுத்துச் செல்லும் வேதியியல் பொருளான நியூரோடிரான்ஸ்மிட்டரான செரடோனின் (Serotonin) ஓட்டம் தடைப்படுவதால் இது ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. ஒ.சி.டி.யால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் இருப்பின் அவர்களைச் சார்ந்தவருக்கும் இது வரலாம் என்பதால், மரபணுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
பொதுவாக, குடும்பத்தில் ஏதேனும் மன உளைச்சல் தரும் சம்பவம் ஏற்படும்போது, அது ஒ.சி.டி. அறிகுறிகள், ஒருவருக்கு ஆரம்பிக்கத் தூண்டுதலாகவோ / அதிகப்படவோ காரணமாகிறது (எ.டு: பாலியல் கொடுமை, நோய், நேசிப்பவரின் பிரிவு / மரணம், இடமாற்றம், பள்ளி மாற்றம்/பிரச்சனை)...பெற்றோர் இதைக் கண்டுபிடிப்பது எப்படி?பொதுவாக ஒ.சி.டி. பாதித்துள்ள குழந்தையோ / டீன் ஏஜரோ கவலையாக, மகிழ்ச்சி யற்று காணப்படுவர். பெற்றோர் கவனமாக பார்க்க வேண்டிய அறிகுறிகள்...
1.திரும்பத் திரும்ப கைகள் கழுவுவதால் வெடிப்புற்று இருக்கும் கைகள்...
2.மிகவும் அதிகமாக சோப்பு / பாத்ரூமிலுள்ள டாய்ெலட் பேப்பரை உபயோகித்தல்...
3.திடீரென பரீட்சையில் மதிப்பெண் குறைதல்...
4.வீட்டுப்பாடம் முடிக்க வெகுநேரம் எடுத்துக் கொள்ளுதல்...
5.குடும்பத்தில் உள்ளவர்களை ஒரே கேள்விக்கு திரும்பத் திரும்ப பதில் சொல்ல சொல்வது / வித்தியாசமான வாசகங்களை மறுபடி மறுபடி சொல்ல சொல்வது...
6.ஏதேனும் நோய் தொற்றி விடுமோ என்ற விடாத அச்சம்...
7.மிக அதிகமாக துணிகளைத் துவைக்க போடுவது...
8.அதிகம் சுத்தம் பார்ப்பது...
9.தூங்குவதற்கு ஆயத்தம் ஆவதற்காக அளவுக்கு அதிக நேரம் செலவழித்தல்...
10.யாருக்கோ ஏதோ மோசமான சம்பவம் நடக்கப்போகிறதென்ற தொடர் பயம் மற்றும் அது குறித்து ஐயத்தைப் போக்கிக் கொள்ள அளவுக்கு அதிகமாக கேள்வி கேட்பது...
இந்த அறிகுறிகள் குழந்தையிடம் காணப்பட்டால், உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். 'ஒ.சி.டி.' உடன் வேறு பல மனநலப் பிரச்னைகளும் சேர்ந்து காணப்படலாம் (எ.டு: பதற்றக் கோளாறு, மனச்சோர்வு (Depression), ஏ.டி.எச்.டி. கற்றல் குறைபாடு போன்றவை)...
சிகிச்சைபொதுவாக, பல வருடங்கள் ஒ.சி.டி. நோயில் கஷ்டப்பட்ட பிறகே, இவர்கள் உதவி கோரி உளவியல் நிபுணரிடம் அழைத்து வரப்படுகிறார்கள். தேர்ச்சி பெற்ற உளவியல் நிபுணர் / உளவியல் மருத்துவர், அது ஒ.சி.டி. தானா என நிர்ணயித்த பிறகு அதற்குரிய சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.
சிகிச்சை பலனளிக்க, பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு மிக அவசியம். அறிவாற்றல் மற்றும் நடத்தை சிகிச்சை போன்ற உளவியல்-சார் சிகிச்சைகள் நல்ல பலனளிக்கின்றன. தேவைப்பட்டால், குழந்தையின் நிலைக்கேற்ப மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படலாம்.
அறிவியல்பூர்வமாக தேர்ச்சிபெற்ற நிபுணரிடம் சிகிச்சையளிக்கப்படவில்லை என்றால், ஒ.சி.டி.யின் அறிகுறிகள் மோசமாகும் வாய்ப்புள்ளது. அதனால், சிகிச்சை அளிக்கும் ஆலோசகர், உளவியலில் முதுகலைப்பட்டம்/டாக்டரேட் பட்டம் பெற்றவராகவும், மருத்துவ உளவியலில் (Clinical Psychology) பயிற்சி பெற்றவரா எனத் தெரிந்து செல்வது அவசியம்.
பெற்றோர் கவனத்துக்கு...
ஒ.சி.டி. என்பதும் நீரிழிவு, இதய நோய் போல ஒரு பிரச்னையே. ஒ.சி.டி.யின் தன்மையால், குழந்தை எவ்வளவு நினைத்தாலும் தானாக அவர்களின் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமென்றே குழந்தை அவ்வித கட்டாய செயல்பாடுகளில் ஈடுபடுவதுமில்லை. அதனால், திட்டுவதன் மூலம் இதை சரி செய்ய இயலாது. ஒ.சி.டி. என்பது, குழந்தையின் தவறோ, பெற்றோரின் தவறோ, யாரோ செய்த பாவமோ அல்ல.
ஒ.சி.டி. குறித்த முழு விவரங்களைத் தெரிந்து கொண்டு, தங்களின் எதிர்பார்ப்பை சரி செய்து, குழந்தைக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது முக்கியம். 'ஒ.சி.டி.யை சமாளித்து வெல்லலாம்' என்ற நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துவது முக்கியம். குழந்தைகளைப் பாதிக்கும் இணக்கம் அற்ற நடத்தைக் கோளாறு (Oppositional Defiant Disorder) குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.
ஒ.சி.டி. உள்ள குழந்தைகளுக்கு, எப்போதுமே விழிப்புநிலையில் இருப்பது போலே இருக்கும். இவர்களால் தளர்வாகவோ, ஓய்வாகவோ உணர முடியாது.ஒ.சி.டி.யின் தன்மையால், குழந்தை எவ்வளவு நினைத்தாலும் தானாக அவர்களின் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமென்றே குழந்தை அவ்வித கட்டாய செயல்பாடுகளில் ஈடுபடுவதுமில்லை.
(டாக்டர் சித்ரா அரவிந்த்)
குழந்தைகளை பயமுறுத்தும் மன சுழற்சி நோய் (Obsessive Compulsive Disorder - OCD)
Reviewed by Lankastudents
on
10:07:00 PM
Rating:
No comments: