கர்ப்ப கால நீரிழிவு (GDM) - அவதானம் தேவை.



கர்ப்ப கால நீரிழிவு (GDM) - அவதானம் தேவை.
அனுப்புனர்
MB.MOHAMED SILMY
(Medical student - EUSL)

என்னதான் கவனமாக இருந்தாலும் கர்ப்ப காலத்தில் சில நோய்கள் வந்து தொல்லை தருவது சகஜம்தான். அந்த வகையில் கர்ப்பிணிகளுக்கு வருகிற திடீர் சர்க்கரை நோய் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும், அதை வெல்லும் வழி முறைகள் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
கர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரை நோயில் மூன்று வகை உண்டு. குழந்தைப் பருவத்திலிருந்தே நீரிழிவு உள்ளவர்கள் முதல் வகை. அதாவது, டைப் 1 டயாபடீஸ். இவர்கள் நோயின் ஆரம்பத்திலிருந்தே இன்சுலின் சிகிச்சையில்தான் இருப்பார்கள்.
ஆகவே, இவர்கள் மகப்பேறு மருத்துவர், நீரிழிவு நிபுணர் மற்றும் ஒரு உணவியல் நிபுணர் உதவியுடன், தங்களுக்குத் தேவையான உணவுமுறையையும், இன்சுலின் அளவையும் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும்.
இரண்டாவது வகையான டைப் 2 டயாபடீஸ், இருபது வயதுக்குமேல் வருவது இவர்கள் மாத்திரை, இன்சுலின் ஊசி மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் தங்கள் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருப்பார்கள்.
இவர்கள் கர்ப்பம் தரித்ததும் மாத்திரை, இன்சுலின் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று மகப்பேறு மருத்துவர் சொல்லும் யோசனையைப் பின்பற்ற வேண்டும். சில நீரிழிவு மாத்திரைகள் சிசுவைப் பாதித்து, அதன் வளர்ச்சிப் போக்கை மாற்றி விடலாம் என்பதால் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியம்.
மூன்றாவது பிரிவினர்தான் இந்தக் கட்டுரையின் 'வி.ஐ,பி'க்கள். சில பேர் நமக்குத்தான் நீரிழிவு இல்லையே என்று சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால், கர்ப்பமானதும் 'இதோ நான் வந்துவிட்டேன்' என்று அழையாத விருந்தாளியாக வந்து சேர்ந்துவிடும் நீரிழிவு. இதற்கு 'கர்ப்பகால நீரிழிவு'(Gestational Diabetes Mellitus - GDM) என்று பெயர். இது பொதுவாக, கர்ப்பம் தரித்த 24-வது வாரத்துக்குப் பிறகு வருகிறது. இப்போது இவ்வகை நீரிழிவு ஏற்படுவது கர்ப்பிணிகளிடம் அதிகரித்து வருகிறது.
இதற்கு என்ன காரணம்?
கருப்பையில் உள்ள நச்சுக் கொடியில்(Placenta) புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை கர்ப்பிணியின் ரத்தத்தில் இருக்கிற இன்சுலினுக்கு எதிராக வேலை செய்யும்.
இதனால், கர்ப்பிணிக்கு இன்சுலின் செயல்பாடு குறைந்து, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதை சரி செய்ய கர்ப்பிணிக்கு இன்சுலின் அதிகமாக சுரக்கும். இன்சுலின் ரத்தச் சர்க்கரையை சரியான அளவுக்குக் கொண்டு வந்துவிடும். இது கர்ப்பிணிகள் எல்லோருக்கும் இயல்பாக நிகழ்கிறது.
ஆனால், சிலருக்கு மட்டும் கர்ப்ப காலத்தில் அதிகரிக்கிற ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதற்கு இன்சுலின் தேவையான அளவுக்குச் சுரக்காது. இதன் காரணமாக, தொடர்ந்து அவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அதிகமாகவே இருக்கும். அப்போது, அவர்களுக்குக் 'கர்ப்ப கால நீரிழிவு' வருகிறது. யாருக்கு வருகிறது?
கர்ப்பகால நீரிழிவு பெரும்பாலும் நீரிழிவு உள்ள பரம்பரையில் பிறந்தவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள், மிகத் தாமதமாக கர்ப்பம் தரிப்பவர்கள், 'பி.சி.ஓ.டி' பிரச்னை உள்ளவர்கள், முதல் பிரசவத்தில் இந்த நோய் இருந்தவர்கள், கடந்த பிரசவத்தில் பெரிய தலை/அதிக எடையுடன் குழந்தை பிறந்தவர்கள் அல்லது குழந்தை இறந்து பிறந்தவர்கள் ஆகியோருக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.
என்ன அறிகுறிகள்?
சிலருக்கு அதிக தாகம், திகப் பசி,அடிக்கடி சிறுநீர் கழிதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். பலருக்கு வழக்கமான ரத்தப் பரிசோதனைகளில்தான் இந்த நோய் இருப்பதே தெரிய வரும்.
என்னென்ன பரிசோதனைகள்?
முதல்முறையாகக் கர்ப்பம் தரித்தவர்களுக்கு 'நீரிழிவு உள்ளதா' என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவரிடம் வரும் முதல் 'விசிட்'டில் வெறும் வயிற்றிலும், சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்தும் ரத்தச்சர்க்கரை டெஸ்ட் செய்யப்படும்.
  வெறும் வயிற்றில் இதன் அளவு 126மி.கி/டெ.லி.,க்கு அதிகமாகவும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 200 மி.கி/டெ.லி.க்கு அதிகமாகவும், ஹெச்பிஏ1சி அளவு 6%-க்கு அதிகமாகவும் இருந்தால், அவருக்கு நீரிழிவு உள்ளது என்று அர்த்தம். அந்த கர்ப்பிணிக்கு நீரிழிவு நிபுணரின் உதவியுடன் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறைகள் பரிந்துரைக்கப்படும்.
அதன் பிறகு, கர்ப்பம் தரித்த 16-18 வாரங்களில் ஓ.ஜி.டி.டி'(OGTT)டெஸ்ட் செய்யப்படுகிறது. கர்ப்பிணிக்கு 75 கிராம் குளுக்கோஸ் குடிக்கத் தருகிறார்கள். 2 மணி நேரம் கழித்து ரத்தச்சர்க்கரையைப் பார்க்கிறார்கள்.
அது 140மி.கி./டெ.லி-க்குக் கீழ் இருந்தால், நீரிழிவு இல்லை. அதற்கு அதிகமாக இருந்தால், நீரிழிவு உள்ளது. நம் நாட்டில் எல்லா கர்ப்பிணிகளுக்கும் இந்தப் பரிசோதனை அவசியம். சிலருக்கு இதை மறுபடியும் 24-28 வாரங்களில் மேற்கொள்ள வேண்டியது வரலாம்.
ஹெச்பிஏ1சி(HbA1C)டெஸ்ட் கர்ப்பிணிக்குக் கடந்த மூன்று மாதங்களில் ரத்தச்சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்ததா, இல்லையா என்பதைத் தெரிவிக்கும் டெஸ்ட் இது. கர்ப்பம் ஆரம்பித்த நாளில் இருந்தே நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா, இல்லையா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளமுடியும். இதன் அளவு 6% என்று இருந்தால் நீரிழிவு இல்லை. 6%-க்கு அதிகமாக இருந்தால் ஏற்கெனவே நீரிழிவு இருக்கிறது என்று அர்த்தம்.
ரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடுகர்ப்பிணிக்கு, வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை 126மி.கி./டெ.லி.வரை, சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 140-200மி.கி./டெ.லி.வரை, ஹெச்பிஏ1சி அளவு 6%-க்குக் கீழே என்று இருந்தால், அவருக்கு நீரிழிவு நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது என்று சந்தோஷப்படலாம். இந்தக் கட்டுப்பாடு பிரசவம் ஆகிற வரை தொடர வேண்டும்.
என்ன சிகிச்சை?
உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் நீரிழிவு கட்டுப்படாதவர்களுக்கு இன்சுலின்தான் சிறந்த சிகிச்சை. காரணம், இன்சுலின் தொப்புள்கொடியைத் தாண்டி குழந்தைக்குச் செல்லாது. இதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. எனவே, இன்சுலினைப் பிரசவம் ஆகும்வரை தொடர வேண்டியது முக்கியம்.
கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறை குளுக்கோமீட்டர் மூலம் அவர்களாகவே ரத்தச் சர்க்கரையை டெஸ்ட் செய்துகொள்ளலாம். அதற்கேற்ப இன்சுலின் போட்டுக்கொள்வது, உணவு முறையை சரிப்படுத்துவது, தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் ரத்தச்சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்த வேண்டியது இன்னும் முக்கியம். கர்ப்பிணிக்கு 28 வாரங்களுக்குப் பிறகு மாதம் ஒருமுறை வயிற்றை 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' செய்து, குழந்தையின் வளர்ச்சியையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
உணவு முறை எப்படி?
*ஓர் உணவியலாளர் உதவியுடன் தேவையான கலோரி உணவைக் கணக்கிட்டு அதற்கேற்ப உணவுத்திட்டம் அமைத்துக் கொள்வது
நல்லது.
*பொதுவாகச் சொன்னால், சரியான உடல் எடை உள்ளவர்களுக்குத் தினமும் 2000-2500 கலோரிகளும், உடற்பருமன் உள்ளவர்களுக்கு 1200 - 1800 கலோரிகளும் தேவை.
*இனிப்பையும் சர்க்கரையையும் தவிர்க்க வேண்டும்.
*தானிய உணவுகள், கிழங்கு மற்றும் வேர்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
*அரிசிக்குப் பதிலாக, கோதுமை, கேழ்வரகு சேர்த்துக்கொள்ளலாம்.
*நார்ச்சத்துள்ள காய்கறி, கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
*ஒரு சிறிய ஆப்பிள், கொய்யா, மாதுளை, பேரிக்காய் இவற்றில் ஒன்றை சாப்பிடலாம்.
*பழச்சாறுகளுக்குப் பதிலாக பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
*வறுத்த, பொரித்த உணவுகளையும் கொழுப்புமிக்க உணவுகளையும் ஓரங்கட்டுங்கள்.
*உணவை சிறிய இடைவெளிகளில் சிறிது சிறிதாக அடிக்கடி சாப்பிட்டுக் கொள்ளலாம்.
சிகிச்சை எடுக்காவிட்டால்?
கர்ப்பிணிக்கு அடிக்கடி சிறுநீர்ப் பாதைத் தொற்று, காளான் தொற்று, பூஞ்சைத் தொற்று போன்றவை ஏற்படலாம். கருச்சிதைவு ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகி, 'முன்பிரசவ வலிப்பு' (Pre-eclampsia) வரலாம்.
கர்ப்பத்தின் கடைசி மூன்று வாரங்களில் குழந்தை கருப்பையிலேயே இறந்து விடலாம். குழந்தை அதிக எடையுடன் அல்லது பெரிய தலையுடன் பிறக்கலாம். பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம்; குழந்தை பிறந்ததும் இறந்துவிடலாம். கர்ப்பிணிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். நோய் கட்டுக்குள் இருந்தால், இத்தனைக்கும் 'டாட்டா' காட்டிவிடலாம்!
எச்சரிக்கை மணி!
பெரும்பாலான கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் முடிந்ததும், நீரிழிவு மறைந்துவிடும்; சிகிச்சையும் தேவைப்படாது. என்றாலும், பாதிப்பேருக்கு அடுத்த 5-லிருந்து 20 வருடங்களுக்குள் டைப் 2 டயாபடீஸ் வர வாய்ப்புள்ளது. ஆகவே, இதை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, சரியான உணவுமுறையைக் கடைப்பிடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, உடல் எடையைப் பராமரித்து டயாபடீஸ் வராமல் தடுத்துக்கொள்ள வேண்டும்.

(தகவல் உதவிக்கு நன்றி.
Dr.K.Kaneshan)

அனுப்புனர்
MB.MOHAMED SILMY
(Medical student - EUSL)

கர்ப்ப கால நீரிழிவு (GDM) - அவதானம் தேவை. கர்ப்ப கால நீரிழிவு (GDM) - அவதானம் தேவை. Reviewed by Lankastudents on 5:48:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.