கொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்
அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். நுஸ்ரி (நளீமி)
கொரோனா வைரஸ் இலங்கையிலும் மிக வேகமாகப் பரவி வருகின்ற இக்காலகட்டத்தில் அனைவரையும் வீடுகளில் முடங்கி இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
வைத்தியர்களும் சுகாதாரத்துறை நிபுணர்களும் கூட கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக வீடுகளில் தனிமைப்பட்டு இருப்பதே சிறந்தது என அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புகள், மத்ரசாக்கள், ஏனைய கல்வி நிறுவனங்கள், சுயகற்றல் நிலையங்கள் என அனைத்துமே மூடப்பட்டிருக்கின்றன.
மரபு ரீதியாக மாணவர்கள் கற்று வந்த சகல வழிமுறைகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது பெற்றோருக்குக் கூட பெரும் சுமையாகவும் பிள்ளைகளை வீட்டில் வைத்திருந்து சமாளிப்பது ஒரு சவாலாகவும் மாறியிருக்கிறது.
அதேபோன்று அரசு ஊழியர்கள், தனியார் துறை வேலையாட்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள் என பல சாராரும் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை தோன்றியுள்ளது.
சில பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதேவேளை ஜமாஅத் தொழுகை, ஜுமுஆத் தொழுகை போன்ற மார்க்க விடயங்களுக்கும் தடையேற்பட்டிருக்கிறது. எனவே விரும்பியோ விரும்பாமலோ ஒரு கட்டாய விடுப்பு அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.
ஆகவே கிடைத்த விடுமுறையையும் ஓய்வையும் வீணாக்கி, திட்டமிடாமல் கழித்து, நேரவிரயம் செய்வதை விட ஒரு முஸ்லிம் என்ற வகையில் இந்த சவாலையும் சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஓய்வு என்பதும் விடுமுறை என்பதும் அல்லாஹ்வின் அருட்கொடைகளாகும். எனவேதான் நேரத்தின் முக்கியத்துவம் குறித்து பல அல்குர்ஆன் வசனங்கள் பறைசாற்றுகின்றன. காலத்தின் மீது சத்தியம் செய்யப்பட்டிருப்பதும் காலத்தைக் குறிக்கும் சொற்களே அத்தியாயங்கள் சிலவற்றுக்கு பெயராக்கப்பட்டிருப்பதும் நேரத்தின் பெறுமானத்தை உணர்த்துவதற்கேயாகும்.
காலத்தின் பரிமாணத்தை விட கடமைகளின் கனதி எப்போதும் மனிதனுக்கு அதிகமாகவே இருக்கும். எனவேதான் நபிகளார் (ஸல்) அவர்கள் 5 விடயங்கள் வர முன் 5 விடயங்களைப் பயன்படுத்த வேண்டும் என ஏவுகையில் வேலைப்பளு வருவதற்கு முன்னர் ஓய்வைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்கள்.
மேலும் மனிதர்கள் துஷ்பிரயோகம் செய்யும் மிகப்பெரும் இரு அருட்கொடைகளில் ஒன்றாக ஓய்வைச் சுட்டிக்காட்டினார்கள். மேலும் மறுமையில் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் குறித்து பொதுவாகவும் உலகில் கழித்த ஒவ்வொரு கணம் குறித்து குறிப்பாகவும் கடுமையாக விசாரிக்கப்படுவான் என எச்சரித்தார்கள்.
இந்நிலையில் இந்த தனிமைப்படுத்தல் விடுமுறையானது ஒருபுறம் நெருக்கடி நிலையாக, நமக்கு ஏற்பட்ட ஒரு சோதனையாக அமைந்திருக்கின்ற அதேவேளை நேரமின்மை காரணமாக நாம் இழந்து வந்த பல்வேறு விடயங்களை மீட்டிக்கொள்ளவும் இறைவன் தந்த ஒரு வாய்ப்பாகவும் இதனை நாம் நோக்க முடியும்.
குடும்ப ரீதியாக பல நெருக்கடிகளுக்குள் வாழ்ந்து வந்த நாம் பெற்றோர் பிள்ளை உறவில் விரிசல்கள் காணப்பட்ட நிலையில் பெற்றோர்களுடன் பிள்ளைகள் நெருங்கிப் பழகவும் நேரமின்மை காரணமாக நாம் மறந்து போயிருந்த பல்வேறு நல்ல விடயங்களை செய்து பார்க்கவும் இது சிறப்பான சந்தர்ப்பமாக அமைந்து விட்டது எனலாம்.
பாடசாலை, கல்வி நிறுவனங்கள் என்பவற்றின் மூலம் முறையான கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பு தடுக்கப்பட்டிருந்தாலும் இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையில் கூட வீடுகளில் மாணவர்கள் தமது நேரங்களை பயனுள்ள வகையில் கழிப்பதற்கான பல்வேறு செயற்பாடுகளில் நாம் அவர்களை ஈடுபடுத்த முடியும்.
அத்தோடு பெரியவர்களும் வீட்டில் அதிக நேரம் கழிக்கும் இச்சந்தர்ப்பத்தை தமது ஆளுமை விருத்திக்காகவும், ஆன்மிக மேம்பாட்டுக்காகவும், குடும்ப மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அந்த வகையில் நமக்கு கிடைத்திருக்கும் இந்த விசேட விடுமுறை காலத்தில் ஆன்மிக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆற்றல் விருத்தி ரீதியாகவும் எம்மை எவ்வாறு மேம்படுத்தலாம் எனவும் எவ்வாறு நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் 75 வழிமுறைகள் பற்றி இங்கு நோக்கப்படுகிறது.
பொதுவான வழிகாட்டல்கள்
1. திட்டமிடுவோம்:
எந்த ஒரு விடயமும் திட்டமிடப்படாமல் வெற்றியளிப்பதில்லை. எண்ணங்கள் உயர்வாக இருந்தால்தான் செயல்களும் சிறப்படைகின்றன. செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தது என்றும் தாம் திட்டமிடுவதையே ஒருவரால் அடைந்துகொள்ள முடியும் என்பதையும் நபிகளார் (ஸல்) சுட்டிக்காட்டினார்கள்.
எனவே இந்த விடுமுறையைப் பயனுள்ளதாக்க முறையான திட்டமிடல் மிக அவசியமானது. இந்த விடுமுறை காலத்தில் ஒவ்வொரு துறையிலும் அடைய வேண்டிய அடைய முடியுமான இலக்குகளை வரையறுத்துக்கொள்ள வேண்டும்.
2. நேரசூசி ஒன்றைத் தயாரிப்போம்:
திட்டமிடுவதன் அடுத்த கட்டம் திட்டமிட்ட விடயங்களை படிப்படியாக நாளாந்தம் செய்து முடிக்க வேண்டும். ஆகவே ஒவ்வொருவரும் தமது இலக்குகளை அடையும் வகையில் பொருத்தமான நேரசூசியொன்றைத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
3. வீட்டுச் சூழலை ஒழுங்குபடுத்துவோம்:
திட்டமிட்ட விடயங்களை நேரசூசிப்படி இயங்கி அடைய வேண்டுமானால் அதற்குப் பொருத்தமான சூழல் உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக வீட்டில் கற்பதாக இருந்தால் கற்றலுக்கான வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு திட்டமிடும் ஒவ்வொரு விடயத்துக்கும் ஏற்ப வீடடுச் சூழலை ஒழுங்குபடுத்த வேண்டும்.
4. நட்புடன் நடந்து கொள்வோம்:
வீட்டில் பிள்ளைகள் அடைபட்டிருக்கும் நிலை ஏற்பட்டிருந்தாலும் வீட்டுச் சூழலில் சுதந்திரமும் மகிழ்ச்சியும் இழையோட பெற்றோர்கள் வழி செய்ய வேண்டும். வீட்டில் அடைத்து வைத்தது போல் நடத்தாமல் பெற்றோர்கள் கட்டளையிடுபவர்களாக இராமல் நட்பான சூழல் உருவாக்கப்பட்டால் வீட்டிலேயே இருப்பது சலிப்பை ஏற்படுத்தாது. அதேநேரம் மிதமிஞ்சிய சுதந்திரமும் மேற்பார்வை இல்லாத நிலையும் கூட உகந்ததல்ல.
5. போதியளவு தூங்குவோம்:
பொதுவான நாட்களில் இரவில் தாமதித்துத் தூங்கி அதிகாலை எழுந்து பரபரப்புடன் செயற்பட்டிருப்போம். ஓய்வில்லாமல் இயங்கியிருப்போம். எனவே இப்போது சரியான நேரத்தில் உறங்கி உடலுக்குத் தகுந்த ஓய்வினைக் கொடுப்போம்.
அது நமது அடுத்த செயற்பாடுகளுக்கு தேவையான உடல் மற்றும் மன வலிமையைத் தரும். தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். அதற்காக அளவு கடந்த தூக்கத்துக்கும் இடமளித்துவிடக் கூடாது.
6. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவோம்:
நாளாந்தம் வீட்டிலுள்ள பெண்கள் உட்பட அனைவரும் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவோம். வீட்டை ஒரு உடற்பயிற்சிக் கூடமாக (GYM) மாற்றுவோம். சிறு உடலசைவுச் செயற்பாடுகளிலாவது கவனம் செலுத்துவோம். வளர்ந்த ஆண் பிள்ளைகள் இருப்பின் கழிவுப் பொருட்களைக் கொண்டே உடற்பயிற்சி உபகரணங்களை தயாரித்துக்கொள்ளலாம். பலமான முஃமினே பலவீனமான முஃமினை விட சிறந்தவன் என்பதை நினைவில் கொள்வோம்.
7. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவோம்:
கடையுணவுகளைத் தவிர்த்து சுத்தமான, சுகாதாரமான, வீட்டுத்தயாரிப்பு உணவுகளையே உண்போம். நோய் பரவும் காலமாகையால் உடல் ஆராக்கியம் மிக முக்கியம். சத்துள்ள போஷாக்கான உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.
8. சுயவிசாரணை செய்வோம்:
நேரசூசியில் உள்ள விடயங்களை சுயவிசாரணைப் பட்டியலாகத் தயாரித்து தினமும் திட்டமிட்ட வேலைகள் இடம்பெற்றதை உறுதி செய்வோம். இல்லாவிட்டால் முதல் நாளை விட அடுத்த நாள் செயற்பாடுகளில் தொய்வு ஏற்படும்.
9. குடும்பமாக உண்போம்:
ஏனைய காலங்களில் வேலைப்பளு காரணமாக குடும்பமாக உண்பது சாத்தியமற்றதாகியிருக்கலாம். இப்போது பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றாக உணவருந்தும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். ஒன்றாக உணவருந்துவது பறக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய நபிவழியாகும் என்பதை நினைவில் கொள்வோம்.
10. கலந்துரையாடுவோம்:
மனம் விட்டுப் பேசுவதற்கு நேரமின்றி இருந்திருப்போம். வேலைநாட்களின் களைப்பும் பதற்றமும் பெற்றோர் பிள்ளை உறவின் மீது அதிக பாதிப்பை செலுத்தியிருக்கும்.
பாடசாலை, பிரேத்தியேக வகுப்பு, சுயகற்றல் என இயந்திரமயப்பட்ட பிள்ளைகளும் பெற்றோருடன் பகிர வேண்டிய பல விடயங்களை பகிராமலேயே இருந்திருப்பர். எனவே இப்போது சாப்பிடும் வேளைகளில் அல்லது இரவில் தனியான நேரமொதுக்கி மனம் விட்டுப் பேசவும் குடும்ப விடயங்களை கலந்துரையாடவும் முயற்சிப்போம்.
ஆன்மீக ரீதியான வழிகாட்டல்கள்
11. சந்தர்ப்ப துஆக்களை காட்சிப்படுத்துவோம்:
துஆக்கள் மனனமில்லை என்பதும் மனனமான துஆக்கள் கூட உரிய சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருவதில்லை என்பதும் பெரும் குறைபாடே. ஆகவே இந்த விடுமுறையில் சந்தர்ப்ப துஆக்களை எழுதி அல்லது பிரதியெடுத்து உரிய இடங்களில் ஒட்டிக்கொள்வோம். உதாரணமாக படுக்கையறையில் தூங்கும் போது ஓத வேண்டிய பிரார்த்தனையை ஒட்ட முடியும்.
12. தினம் ஒரு ஹதீஸ் மனனமிடுவோம்.
ஒவ்வொரு நாளும் சிறிய ஹதீஸ் ஒன்றை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மனனமிட முயற்சிப்போம். தொழுகைகளுக்குப் பின் அன்று மனனமிட்ட ஹதீஸை ஒவ்வொருவரும் மீட்டிக்கொள்ள முடியும்.
13. அல்குர்ஆன் ஹல்காக்களை அமைப்போம்:
தினமும் குடும்பமாக அமர்ந்து அல்குர்ஆன் ஓதுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்வோம். ஒவ்வொருவராக ஓத ஏனையவர்கள் செவிமடுப்பது சிறந்தது.
14. அல்குர்ஆன் மனனமிடுவோம்:
தினமும் அல்குர்ஆனில் ஒரு சிறிய சூறாவையோ அல்லது ஒரு வசனத்தையோ மனனமிட முயற்சிப்போம். மனனமிடும் வசனங்களை தொழுகைகளில் ஓதி வருவோம்.
15. குடும்பமாக அமர்ந்து காலை மாலை திக்ர் அவ்றாதுகள் அடங்கிய மஃசூறாத் ஓதுவோம்:
நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த காலை மாலை ஓதவேண்டிய திக்ர் அவ்றாதுகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைத் தனியாகவோ கூட்டாகவோ ஓத முயற்சிப்போம். அவற்றை ஓதிவருவதன் மூலம் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து நாமும் நமது வீடும் பாதுகாக்கப்படும்.
16. வீடுகளை மஸ்ஜிதாக்குவோம்:
தற்போது பள்ளிவாயலுக்கு செல்வதும் சிக்கலாக இருப்பதால் வீட்டையே பள்ளிவாயலாக்குவோம். வீட்டில் ஒருவரை முஅத்தினாகவும் இன்னொருவரை இமாமாகவும் ஆக்குவோம். அடிப்படை வணக்கங்களை உரிய வேளைகளில் நிறைவேற்ற பழகுவோம்.
ஏனைய நாட்களில் அடிப்படையான தொழுகைகள் மற்றும் இதர அம்சங்களை நிறைவேற்ற நமக்கு போதிய அவகாசம் கிடைப்பதில்லை. எனவே விடுமுறையில் தொழுகையை உரிய நேரத்தில் வீட்டிலேயே ஜமாஅத்தாக ஆண்கள், பெண்கள் அனைவரும் இணைந்து தொழுவோம்.
17. முன் பின் சுன்னத்களை பேணுவோம்:
கடந்த காலங்களில் அவசரமாக தொழுகைகளுக்கு சென்றுவந்த நாம் முன் பின் சுன்னத்களை முறையாகப் பேணாதிருந்திருப்போம். தற்போது நபியவர்களால் வலியுறுத்தப்பட்ட 12 ரக்அத்களையும் பேணித்தொழ முயற்சிப்போம்.
18. ஏனைய சுன்னத் தொழுகைகளையும் பேணுவோம்:
குறிப்பாக முற்பகல் வேளையில் ழுஹாத் தொழுகையையும் தூங்க முன் வித்ர் தொழுகையையும் அதிகாலை எழும்பும் நாட்களில் தஹஜ்ஜத் தொழுகையையும் நிறைவேற்ற முயற்சிப்போம். வழமையை விட நேரகாலத்தோடு தூங்க முடியுமாகையால் அதிகாலையில் எழும்ப முயற்சிக்கலாம்.
19. தினமும் ஒரு ஸதகா செய்வோம்:
சிறிய அளவிலாவது தினமும் ஸதகா செய்வோம். குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக தொழில் செய்ய முடியாத வறிய குடும்பத்தினருக்கு உதவுவோம். பணத்தினால் ஸதகா செய்ய முடியாத நிலையிருப்பின் ஆறுதல் வாரத்தைகள், சரீர உதவிகள் என மானசீக ரீதியான ஸதகாக்களில் ஈடுபடலாம்.
20. கழா நோன்புகளையும் சுன்னத்தான நோன்புகளையும் நோற்க முயற்சிப்போம்:
வீட்டிலேயே அதிக நேரம் இருப்பதால் இக்காலத்தில் நோன்பு நோற்பது இலகுவானது. களைப்பு ஏற்படுவது குறைவாகவே இருக்கும். ஆகவே கடந்த வருடம் நோற்கத் தவறிய நோன்புகள் இருப்பின் அவற்றை நோற்க முயற்சிக்கலாம் அல்லது திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் சுன்னத்தான நோன்பு நோற்கமுடியும்.
21. அதிகம் பிரார்த்திப்போம்:
பிரார்த்தனைதான் ஒரு முஃமினின் ஆயுதமாகும். எனவே நமது ஆரோக்கியத்துக்காகவும் தொற்று நோயிலிருந்து உலக மக்கள் முழுமையாக விடுதலை அடையவும் அதிகம் பிரார்த்திப்போம். நபிகளார் தொற்று நோயிலிருந்து பாதுகாப்புத் தேடிய துஆக்களை விசேடமாக ஓதிக்கொள்வோம்.
22. அதிக நேரம் வுழூவுடன் இருப்போம்:
அது ஷைத்தான் எம்மை அணுகுவதை விட்டும் தடுக்கும். அடிக்கடி வுழூ செய்வதால் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.
23. மார்க்க சட்ட திட்டங்களை கற்போம்:
இன்று மார்க்க விடயங்களை கற்றுக்கொள்ள பல வழிகள் திறந்தே இருக்கின்றன. இஸ்லாமிய நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளின் இஸ்லாமிய பக்கங்கள் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மொழியிலேயே பல இஸ்லாமிய இணையத்தளங்கள் இயங்குகின்றன. அவற்றினூடாக ஒருநாளைக்கு ஒரு புதிய விடயத்தையாவது கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.
24. உபன்னியாசங்கள் செவிமடுப்போம்:
இவ்வாரம் குத்பாவை செவிமடுக்கும் வாய்ப்பு இல்லை. பள்ளிகளில் மார்க்க உபன்னியாசங்களை கேட்கும் வாய்ப்பும் இல்லை. ஆகவே தினமும் வானொலியில் முஸ்லிம் சேவையில் பல பயனுள்ள மார்க்க உபன்னியாசங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. அல்லது யூடியூப் போன்ற வலைத்தளங்களில் உபன்னியாசங்கள் கொட்டிக்கிடக்கின்றன. பொருத்தமானவற்றை செவிமடுத்து மார்க்க அறிவைப் பெருக்கிக்கொள்ளலாம்.
25. எந்நேரமும் இறைநினைவுடன் செயற்படுவோம்:
ஏனெனில், இறைநினைவு மனதிற்கு அமைதியையும் சந்தேசத்தையும் தருவதோடு வாழ்வின் அதிக பறக்கத்தையும் இறை பொருத்தத்தையும் வழங்கும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆன்மிக வாழ்வின் பெறுமானத்தை உணர்த்த வேண்டும்.
இவற்றை ஒரு கட்டளையாக அல்லாமல் பிள்ளைகளின் சுய விருப்புடன் செய்வதற்கு தூண்டுவதோடு அவர்களுடன் இணைந்து பெற்றோர்களும் செயற்படுவது அவசியமாகும்.
அறிவு ரீதியான வழிகாட்டல்
26. வீடுகளை வகுப்பறையாக்குவோம்:
பாடசாலைகள் மூடப்பட்டாலும் கற்றலுக்கான வாய்ப்புகள் மூடப்படவில்லை. எனவே வீட்டில் ஓர் அறையை வகுப்பறையாக்குவோம். கற்பதற்கான மேசை, வெண்பலகை என்பவற்றை ஏற்பாடு செய்துகொள்வோம்.
27. நேரசூசி தயாரித்து சுயகற்றலில் ஈடுபடுவோம்:
பாடசாலைப் பாடங்கள் ஒவ்வொன்றையும் சுயமாகக் கற்க ஆரம்பிப்போம். சுயகற்றலே பிரதானமானது. ஆகவே நேரசூசிப்படி ஏற்கனவே கற்ற பாடங்களை மீட்டுவதோடு புதிய பாடங்களையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். பாடநூல்களை வீட்டிலிருந்து கற்பதற்கு பெற்றோர் வழிகாட்டலாம்.
28. உறவினர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம்:
வீட்டில் உள்ள பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கக் கூடியவர்களாக இருப்பின் பெற்றோர்களிடமும் அல்லது மூத்த சகோதர சகோதரிகள், உறவினர்கள் இருப்பின் அவர்கள் மூலமாக சுயமாகக் கற்று விளங்க முடியாத விடயங்களை கற்றுக்கொள்ளலாம்.
29. பயிற்சிகளில் ஈடுபடுவோம்:
கடந்தகால வினாத்தாள்கள், செயலட்டைகள், மாதிரி வினாத்தாள்கள் என்பவற்றை பயன்படுத்தி கற்ற விடயங்களில் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும். இதற்காக https://www.tamilmesai.com, https://tamilkuruji.com போன்ற இணையத்தளங்களில் மேற்சொன்ன விடயங்களை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும். அத்தோடு School Exam & Seminar Papers Grade 1-13, School Exam & Seminar Papers போன்ற பல முகநூல் பக்கங்களினூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
30. பாடநூல் வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவோம்:
கற்றலில் மிக முக்கியமானது மேலதிக வாசிப்பாகும். எனவே களைப்பான நேரங்களில் கூட அமர்ந்து கொண்டோ அல்லது கட்டிலில் சாய்ந்து கொண்டோ வாசிக்க முடியுமான பாட நூல்களை வாசிக்கலாம். குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய பாடநூல்கள் அவ்வாறாக வாசிக்கப்பட முடியும்.
31. சிறுகுறிப்பு எழுதிக் கொள்வோம்:
தரம் 08 க்கு மேற்பட்ட மாணவர்கள் தினமும் கற்கும் விடயங்களை சிறுகுறிப்புகளாக எழுதிக்கொள்ள வேண்டும். சுயமாக வாசித்து, விளங்கி, சுருக்கத்தை எழுதிக்கொள்ள வேண்டும். சில பாடங்களை அட்டவணைகளாக வரைபுகளாக மாற்றி இலகுவில் நினைவில் வைத்துக்கொள்ள வழிசெய்யலாம்.
32. மனனமிட வேண்டியவைகளை மனனமிடுவோம்:
பரீட்சையில் கூடுதலான புள்ளிகளைப்பெற மனனம் முக்கியமானது. ஆகவே மனனமிடவேண்டிய விடயங்களை வேறாக எழுதி அதிகாலையில் சற்று நேரம் ஒதுக்கி மனனமிட்டு வரலாம். புத்தகங்களை அப்படியே மனனமிடாது ஏற்கனவே தயாரித்த சுருக்கக் குறிப்புகளை அல்லது வினாவிடைகளை மனனமிடலாம்.
33. வானொலி மூலம் கற்றிடுவோம்.
தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு வானொலிகள் மூலமாக இலவசமாகப் பாடங்கள் இடம்பெறுகின்றன. ஆகவே குறித்த நேரத்தில் வானொலியை செவிமடுப்பதன் மூலமும் கற்றுக்கொள்ளலாம்.
தென்றல் அலைவரிசையில் தினமும் காலை 09 மணி முதல் 11மணி வரை தரம் 11 பாடங்களும் 11 மணி முதல் 12 மணி வரை தரம் 12,13 பாடங்களும் தமிழ் சேவை அலைவரிசையிலே மாலை 04மணி முதல் 05 மணி வரை தரம் 06 முதல் தரம் 10 வரையான பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
34. தொலைக்காட்சி மூலமாகக் கற்போம்:
கல்வி அமைச்சினால் நெனச எனும் கல்வித் தொலைக்காட்சிச் சேவை நடாத்தப்படுகிறது. அதன்படி தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு, அக் காணொலிகள் ‘நெனச’ தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. டயலொக் டீவி மூலம் இதனைப் பார்வையிட முடியும்.
35. இணையக்கற்றலில் ஈடுபடுவோம்:
ஒன்லைன் மூலமாக கற்றல் வழிகாட்டிகள், தகவல்கள், மேலதிக நூல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாக கல்வியமைச்சின் மூலம் நடாத்தப்படும் http://www.e-thaksalawa.moe.gov.lk ‘ஈ தக்சலாவ” என்ற இணையத்தளம் மூலம் 1 – 13 வரையான வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள், அதனைக் கற்பதற்கு இலகுவான விதத்தில் மும்மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதற்கும் மேலதிகமாக இணைய நூலகம், விசேட கற்றல், வினாப்பத்திரங்கள், இணையவழிப் பரீட்சைகள், செயலட்டைகள், பாடங்களை செயன்முறை அடிப்படையில் கற்கும் விதமாகக் காணொலிகள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழில் இலகுவாக கற்பதற்கு ஈ-கல்வி http://www.ekalvi.org/e-lessons இணையத்தளமும் பல்வேறு அறிவியல் விடயங்களைக் கற்றுக்கொள்ள https://www.khanacademy.orgஇணையத்தளமும் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ரீதியான வெளியீடுகளைப் பெற்றுக்கொள்ள https://www.khanacademy.orgஇணையத்தளமும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் கடந்தகால வினாப்பத்திரங்கள், புள்ளிவழங்கல் திட்டம் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள https://doenets.lkஇணையத்தளமும் காணப்படுகின்றன.
36. ஒன்லைன் மூலமான குறுங்கால பாடநெறிகளைத் தொடர்வோம்:
வெளிநாடுகளில் பெரும்பாலான மாணவர்கள் பாடசாலையில் கற்கும் அதேவேளை பகுதி நேரமாக இணையவழி குறுங்காலப் பாடநெறிகளைத் தொடர்ந்து தமது தகைமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்கின்றனர்.
நமது நாட்டில் இவ்வழக்கம் மிகக் குறைவு. எனினும் இவ்விடுமுறை காலத்தில் நாமும் இவ்வாறான பாடநெறிகளைத் தொடர முடியும். ஆங்கிலப்பாடநெறி, கணணிப்பாடநெறிகள், திறன்விருத்திப் பாடநெறிகள் பல காணப்படுகின்றன.
இதற்கு சிறந்த இணையத்தளம் https://www.udemy.com இதன் மூலம் இதுவரை நூற்றுக்கும் அதிகமான பாடநெறிகளை 40 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் கற்றிருக்கிறார்கள்
37. காணொலிகள் மூலம் அதிகம் கற்போம்:
ATVL STYLES எனும் நிறுவனம் இலங்கைப் பாடசாலை பாடத்திட்டம் முழுவதையும் வீடியோவோக கற்பிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இவர்களது இறுவட்டுக்களை பெறுவதன் மூலம் வீடியோக்களை பார்வையிடுவதன் மூலமாகவே கற்றுவிடலாம்.
விடயங்கள் இலகுவில் நினைவில் பதிந்து விடும். மேலும் “உன்னால் முடியும்” யூடியூப் அலைவரிசையிலும் குறித்த சில பாடங்களுக்கான வீடியோ பாடங்களை பார்வையிடலாம். “தமிழ்மேசை” யூடியூப் அலைவரிசையும் இத்தகைய முயற்சியில் வெற்றிகண்டுள்ளது.
38. ஆவணத் திரைப்படங்கள் மூலம் ( Documentaries) அறிவைப் பெருக்குவோம்:
விஞ்ஞானம், வரலாறு போன்ற பாடங்களின் மேலதிக அறிவைப் பெருக்கிக்கொள்ள ஆவணத்திரைப்படங்கள் மிகவும் உதவியாக இருக்கும். மன்னர்களின் வரலாறுகள், முக்கிய இடங்களின் வரலாறுகள், விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்பவற்றை ஆவணத்திரைப்படங்கள் மூலம் அறியலாம். இதற்கு “Encarta encyclopedia” போன்ற இலத்திரனியல் கலைக்களஞ்சியங்கள் பெரிதும் உதவும்.
39. கல்வி ரீதியான மீளாய்வு செய்வோம்:
கடந்த தவணையில் நான் பெற்ற பெறுபேறுகள் எப்படி இருந்தன? அதில் திருப்தியாக அமைந்த பெறுபேறுகள் எவை? அதற்குக் காரணம் என்ன? அதில் பெறுபேறுகள் திருப்திகரமாக அமையாத பாடங்கள் எவை? அதற்கான காரணம் என்ன? அடுத்த பரீட்சையில் எப்படி அதனை நிவர்த்திக்கலாம்? என்று Survey – மீளாய்வு ஒன்றை செய்து நமது பலம் பலவீனங்களை அடையாளம் காணலாம்.
40. குறுங்காலத் திட்டம் வகுத்து படிப்படியாக முன்னேற முயற்சிப்போம்:
பலம், பலவீனங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த தவணைக்கான குறுங்கால கல்வி இலக்குகளை தயார் செய்து குறுங்கால செயற்திட்டங்களை உருவாக்கி படிப்படியாக அவற்றை நிறைவேற்றி வெற்றியை நோக்கி நகர முயற்சிப்போம்.
குடும்ப ரீதியான வழிகாட்டல்கள்
41. வீட்டுப் பணிகளை பகிர்ந்தளிப்போம். பங்கெடுப்போம்:
தாய்மார் மட்டுமே வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றி வீட்டுப் பணிகளை அனைவரும் பகிர்ந்து செய்யலாம். நபிகளார் (ஸல்) கூட மனைவிமாருடன் இணைந்து மா பிசைபவர்களாக இருந்திருக்கிறார்கள்.
42. தினமும் சிரமதானம் செய்வோம்:
வீட்டையும் சுற்றுப் புறச் சூழலையும் தினமும் சுத்திகரிப்பதோடு தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தி நிலத்தையும் கழுவிக்கொள்வோம்.
43. வீட்டை அழகுபடுத்துவோம்:
இந்த விடுமுறைகாலத்தைப் பயன்படுத்தி வீட்டை அலங்கரிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். துஆக்களை ஒட்டுவது, நல்ல வாசகங்களை தொங்கவிடுவது போன்ற காரியங்களில் ஈடுபடலாம்.
44. வருமானம் தரும் சிறு தொழிலில் ஈடுபடுவோம்:
தையல், தட்டச்சு, தோட்டம், பண்ணை, சிறு உற்பத்திக் கைத்தொழில் போன்ற வருமானம் தரும் சிறு தொழில்களில் மாணவர்களும் ஈடுபடலாம். அது பெற்றோருக்கும் உதவியாக அமையும்.
45. குடும்ப மரம் வரைவோம்:
இன்று பல பிள்ளைகளுக்கு தமது குடும்ப உறுப்பினர்களைத் தெரியாது. பரம்பரை, வம்சாவழியினரைத் தெரியாது. ஆகவே ஒரு குடும்ப மரம் வரையச் செய்வதன் மூலம் உறவுகளை அறிந்து கொள்ளவும் தனது பரம்பரை பற்றிய அறிவை வளர்க்கவும் செய்யலாம்.
46. வீட்டுத் தோட்டம் செய்வோம்:
முடியுமானவரை வீட்டில் மரங்களை நட்டு அவற்றை பராமரிப்பதற்கு முயற்சிப்போம். அது ஒரு ஸதகாவாக அமைவதோடு இலாபம் தரும் முயற்சியுமாகும்.
47. தேவையற்ற விடயங்களை அகற்றுவோம்:
அலுமாரியில் தேவையற்ற பொருட்கள் பல காணப்படலாம். அதே போல கணணியில், கையடக்கத் தொலைபேசியில் தேவையற்ற கோப்புகள் காணப்படலாம். நேரம் கிடைக்காமையினால் அவை ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்திருக்கும். ஆகவே இந்த விடுமுறை காலத்தில் ஜப்பானின் 5S முறைக்கு ஏற்ப அலுமாரி, கணினி என்பவற்றை ஒழுங்குபடுத்த முயற்சிப்போம்.
சமூக ரீதியான வழிகாட்டல்கள்
48. குடும்ப உறவுகளோடு இணைப்பை ஏற்படுத்துவோம்:
இன்று சொந்தங்களுடனான உறவு குறைந்துகொண்டே வருகிறது. தொற்று நோய் பரவும் இக்காலப்பகுதியில் உறவினர்களை நேரடியாகத் தரிசிப்பதும் உகந்ததல்ல. ஆகவே தொலைபேசி மூலம் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் குடும்ப உறவுகளை தொடர்பு கொண்டு சுகம் விசாரிக்கலாம். பரஸ்பரம் பிராரத்தனைகளையும் குடும்ப, ஊர் நிலமைகளையும் பரிமாறிக்கொள்ளலாம்.
49. பிரயோசனமானவற்றைப் பகிர்வோம்:
சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பாது மக்களை அச்சத்துக்குட்படுத்தாது பயனுள்ள விடயங்களைப் பகிர்ந்துகொள்வோம்.
50. அனுபவங்களைப் பகிர்வோம்:
வீட்டில் மூத்தவர்கள் இளையவர்களுக்காக நேரம் ஒதுக்கி தங்களது கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
51. கதை கேட்போம்:
குறிப்பாக சிறிய குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெரியவர்கள் கதைகளை கூறுவதற்கு முயற்சிக்கலாம். நபிமார்களின் வரலாறுகள், அல்குர்ஆனியக் கதைகள், பாரம்பரியக் கதைகள், படிப்பினைக் கதைகள் என பல விடயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
52. பிராரத்தனை அட்டைகளை வடிவமைப்போம்:
நோயினால் பாதிக்கப்பட்ட தெரிந்தவர்கள் இருப்பின் அவர்களுக்காக பிரார்தனை அட்டை ஒன்றை தயார் செய்து அனுப்பி வைக்கலாம். விரைவில் குணமடைய வாழ்த்தலாம்.
ஆற்றல் விருத்தி ரீதியான வழிகாட்டல்கள்
53. பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுவோம்:
தினமும் மனதுக்கு இதமளிக்கும் பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபட நேரம் ஒதுக்குவோம்.
54. தினம் ஒரு திரைப்படம் பார்ப்போம்:
உடலையும் மனதையும் பாதிக்கும் திரைப்படங்களைத் தவிர்த்து நல்ல கருத்துள்ள குறுந் திரைப்படங்களைப் பார்வையிடலாம். அல்லது இஸ்லாமியத் திரைப்படங்கள் பலவும் வெளிவந்த வண்ணமுள்ளன. அவற்றைப் பார்க்க வழிசெய்யலாம்.
55. கார்டூன் பார்ப்பதில் நேரம் செலவழிப்போம்:
வீட்டிலுள்ள சிறுவயதினருக்கு திரைப்படங்களை விட நல்ல கார்டூன்களை பார்வையிடச் சந்தர்ப்பம் வழங்கலாம். ஆப்ரஹாவின் அழிவு, அஷ்பால் போன்ற இஸ்லாமிய தமிழ் கார்டூன்களும் நபிமார்களின் வரலாறுகள் போன்ற அறபு, ஆங்கில கார்டூன்களும் மிக உகந்தவை. அர்த்தமில்லாத, வன்முறைக் காட்சிகள் கொண்ட கார்டூன்களை பார்வையிடுவதை விட்டும் அவதானமாக இருப்பது அவசியம்.
56. கணினி விளையாட்டுக்கள் விளையாட நேரம் ஒதுக்குவோம்:
பொதுவாக கணினி விளையாட்டுகள் பிள்ளையின் உடல் வளர்ச்சியைப் பாதிப்பதோடு பிள்ளையின் மூளையின் செயற்பாட்டை வன்முறைக்கு சார்பானதாக மாற்றுகின்றது. மன அழுத்தம், மற்றும் பதகளிப்பு முதலானவற்றுக்கு பிள்ளைகள் ஆளாகுகின்றனர்.
எனினும் குறுகிய நேரம் பொருத்தமான கல்வி சார்ந்த விளையாட்டுக்களை விளையாடுவதற்கு அனுமதி வழங்க முடியும். நுண்ணறிவையும் ஆற்றலையும் வளர்க்கும் Spell Master, Typing Master, Scrabble, Chess, IQ Quiz போன்ற கணினி விளையாட்டுக்களை பழக்கப்படுத்தலாம்.
57. சித்திரம் வரைவோம்:
வரையும் ஆற்றல் கொண்ட பிள்ளைகள் இருப்பின் சித்திரங்களை வரைய முயற்சிப்பதோடு அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பலாம். அல்லது சித்திரங்கள் அடங்கிய அல்பம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கலாம்.
58. ஆக்கம் செய்வோம்:
புத்தாக்க சிந்தனைக்கு இடம்கொடுத்து கண்டுபிடிப்பு, கழிவுப் பொருள் மூலம் ஆக்கம் செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம். பாடசாலை நாட்களில் அதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. எனவே விடுமுறையில் அவ்வாறாவற்றிக்கு சந்தர்ப்பங்கள் வழங்க முடியும்.
59. பொருட்களை திருத்துவோம்:
நேரமின்மையால் பல பாவனைக்குதவாத பொருட்கள் வீடுகளில் களஞ்சிய அறையில் குவிக்கப்பட்டு இருக்கும். அவற்றில் உடைந்த மின்சாதனப் பொருட்களை திருத்துதல், சைக்கிள் முதலானவற்றை திருத்துதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதோடு சில பொருட்களை மீள் சுழற்சி நிலையங்களுக்கு விற்பனை செய்யலாம்.
60. மாலைநேரம் மனம் குளிர விளையாடுவோம்:
வீட்டு முற்றத்திலே சகோதர சகோதரிகளோடு விளையாடுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம். ஊஞ்சல்களை கட்டி விளையாடக் கூறலாம். அல்லது பயனுள்ள உள்ளக விளையாட்டுக்களில் பெரியவர்களும் இணைந்து விளையாடலாம்.
61. மொட்டை மாடி இருந்தால் பாதுகாப்பாக பட்டம் விடுவோம்:
தற்போது மைதானத்துக்கோ கடற்கரைக்கோ செல்வது பாதுகாப்பானதல்ல என்பதால் முற்றம் உள்ளவர்கள் அல்லது மொட்டைமாடி உள்ளவர்கள் பட்டம் விட முயற்சிக்கலாம். அது மனதுக்கு மகிழ்வு தரும் நல்ல பொழுதுபோக்காகும்.
62. இரவு வேளையில் குடும்ப மன்றம் நடாத்துவோம்:
இரவில் வீட்டிலுள்ள அனைவரின் பங்குற்றுதலோடு கிறாஅத், பேச்சு, பாட்டு, கதை என திறமை வெளிக்காட்டும் மன்றங்களை ஏற்பாடு செய்யலாம். அது பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதோடு பெற்றோருடனான நெருக்கத்தையும் ஏற்படுத்தும்.
பிள்ளைகள் தமது கருத்துக்களையும் தமது உள்ளத்தில் அடக்கி வைத்திருப்பவற்றையும் வெளியிடவும் சந்தர்ப்பம் கிடைக்கும். பிள்ளைகளின் உள வெளிப்பாடுகளுக்கான களம் அமைத்துக் கொடுத்தலானது உள்ளங்களுக்கு புத்துணர்வு ஊட்டும்.
63. கணினித் தட்டச்சு பழகுவோம்:
வீட்டில் கணினி இருந்தால் மாணவர்களுக்கு தட்டச்சு செய்ய பயிற்சி வழங்கலாம். இதற்கு Typing.com, TypeRacer.com, RapidTyping.com போன்ற இணையத்தளங்கள் உதவியாக அமையும்.
64. சமையலில் உதவுவோம், சமையல் பழகுவோம்:
பெண் பிள்ளைகள் மட்டுமன்றி ஆண் பிள்ளைகளும் தாய்மாருக்கு சமையலில் உதவுவதோடு சிறு சமையல் வேலைகளையும் கற்றுக்கொள்ள இவ்விடுமுறையைப் பயன்படுத்தலாம். தேனீர் தயாரித்தல், தோசை சுடுதல் போன்ற சிறுபயிற்சிகள் அவசியமானது.
65. ஆற்றலை வளர்ப்போம்:
ஒவ்வொருவருக்குள்ளும் ஆற்றல்கள் மறைந்திருக்கும். பேச்சாற்றல், பாடும் ஆற்றல், கவிதை கூறும் ஆற்றல், கிறாஅத் ஓதும் ஆற்றல் என எதுவாக இருப்பினும் அத் திறமையை வெளிக்கொணர்வோம். சிறு வீடியோக்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்வோம் அல்லது வளர்க்க விரும்பும் திறன் ஒன்றை இனம் கண்டு அதனை வளர்க்க முயற்சிக்கலாம்
66. வாசிப்போம்:
பாடசாலைப் பாடங்களுடன் தொடர்பான நூல்களாக அல்லாமல் வெளி உலகு தொடர்பானதும் பொதுவானதுமான புத்தகங்களை வாசிக்க வேண்டும். கதைப் புத்தகங்களையும், நாவல்களையும் வாசிக்கலாம். விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், சுவாரஸ்யமான கட்டுரைகள் முதலானவை ஏற்புடையது. வீட்டில் சிறு வாசிகசாலை ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம்.
67. வாசித்த விடயங்களைப் பகிர்ந்து கொள்வோம்:
வாசித்த பயனுள்ள விடயங்களை குடும்ப உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளலாம். அல்லது அவற்றைத் தொகுத்து ஆக்கங்கள் படைக்கலாம்.
68. virtual Tour
இது சுற்றுலா செல்ல முடியாத ஒரு விடுமுறை. ஆகவே படிப்பினை தரும் இடங்களை தரிசித்தல் புத்துணர்ச்சியை வழங்கும் என்ற அடிப்டையில் வீட்டில் இருந்து கொண்டு இணையத்தளங்கள் மூலமாக எசைவரயட வுழரச செல்லலாம். இதன் மூலம் உண்மை அனுபவம் கிடைக்காவிட்டாலும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். உலக அதிசயங்களை virtual Tour மூலம் கண்டுகளிக்கும் வசதி இணையத்தளங்களில் உள்ளன.
69. வேறு மொழி கற்போம்:
குறிப்பாக ஆங்கிலம், சிங்களம் கற்க அதிக நேரம் ஒதுக்கலாம். மத்ரஸா மாணவர்களாயின் அறபுமொழிக்கும் நேரம் ஒதுக்குவது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு புதிய வசனத்தையாவது கற்க முயற்சிக்கலாம். வீடுகளில் தமிழைத் தவிர்த்து வேறு மொழியில் அனைவரும் பேசுவதை ஊக்குவித்தால் சிறப்பாகக் கற்கலாம்.
70. வாழ்க்கைத் திறன்களை கற்றுக் கொள்வோம்:
இன்று சில மாணவர்களுக்கு அடிப்படை வாழ்க்கைத் திறன்கள் கூட தெரியாது. தினந்தோறும் பாடசாலை செல்ல அவர்கள் பயன்படுத்தும் சைக்கிளுக்கு காற்றடிக்கத் தெரிவதில்லை. சைக்கிள் சங்கிலி கழன்றால் கூட அதனை சரிசெய்யத் தெரியாமல் முழிக்கின்றனர். அதையெல்லாம் கற்றுக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். அதேபோல், வீட்டில் மின்குமிழ் பழுதடைந்தால் கழற்றிப்பூட்டப் பழக்கலாம்.
71. எழுத்தாற்றலை வளர்ப்போம்:
முடிந்த வரை எழுத்துப் பிழையின்றி எழுதப் பயிற்சி எடுக்க வேண்டும். கட்டுரை எழுத, கதை எழுத, கவிதை எழுத பழகலாம். எழுதிய ஆக்கங்களை பத்திரிகைகளுக்கு அனுப்பலாம். சமூக வலைத்தளங்களில் பகிரலாம். அதீத திறமை உங்களிடம் இருப்பின் இந்த விடுமுறையைப் பயன்படுத்தி ஒரு சிறு புத்தகத்தையே எழுதி வெளியிட முடியும்.
72. புதிர்கள், போட்டிகளில் பங்குபற்றுவோம்:
உதாரணமாக பத்திரிகைகளில் வெளிவரும் குறுக்கெழுத்துப் போட்டிகள், சுடோக்குப் போட்டிகள் என்பவற்றில் பங்கு பற்றலாம். அறிவும் தேடலும் வளரும். வெற்றியீட்டினால் பரிசும் கிடைக்கும்.
73. இயற்கையை இரசிப்போம்:
படைப்பினங்களைப் பற்றி சிந்திப்பதும் ஓர் இபாதத்தே ஆகும். இரவு வானம், சூரிய உதயம் போன்ற விடயங்களை வீட்டிலிருந்தே ரசிக்கலாம். அதன் பிரமாண்டத்தை வியந்து அல்லாஹ்வின் வல்லமைகளைப் போற்றலாம்.
74. சொல்வளத்தைப் பெருக்குவோம்:
தமிழ் மொழியிலும் வேறு மொழிகளிலும் சொல் வளத்தை அதிகரிக்க முயற்சி எடுப்போம். ஆங்கில சொல்வளத்தைப் பெருக்க Vocabulary.com, EnhanceMyVocabulary.com போன்ற இணையத்தளங்கள் உதவும்.
75. Personal File – தனிப்பட்ட கோப்பு ஒன்றை தயார் செய்வோம்:
உங்களது பிறப்புச் சான்றிதழ், தபால் அடையாள அட்டை, புகைப்படம், பெறுபேற்று அறிக்கைகள், சான்றிதழ்கள், கடிதங்கள் உள்ளடங்கலாக ஆவணங்களை ஒரு கோப்பில் இட்டு பாதுகாப்பாக வைக்க முயற்சிக்கலாம். உங்களது பத்திரிகை ஆக்கங்கள் வெளிவந்தால் அதனையும் கோப்பில் இடலாம்.
விடுமுறைக்கால மாதிரி நேரசூசி
04.30 மணி – எழும்புதல், காலைக்கடன், தஹஜ்ஜத் தொழுகை
05.00 மணி – சுபஹ் தொழுகை, அல்குர்ஆன் மனனம், மஃதூறாத்
06.00 மணி – தேனீர்
06.15 மணி – உடற்பயிற்சி
06.30 மணி – சிரமதானம் (வீடு சுத்திகரித்தல், தோடட்டப் பராமரிப்பு, ஆடைகழுவுதல், குளித்தல்)
07.15 மணி – பத்திரிகை வாசித்தல் அல்லது செய்தி இணையத்தளம் பார்வையிடல்
08.00 மணி – கற்றல் நடவடிக்கைகள்
09.00 மணி – காலை உணவு
09.30 மணி – ழுஹாத்தொழுகை
09.45 மணி – இணையத்தளம் மூலமான கற்றல்
11.00 மணி – ஓவியம் அல்லது ஆக்கம் அல்லது தட்டச்சு
12.15 மணி – பழச்சாறு தயாரித்து அருந்துதல்
12.30 மணி – ளுஹர் தொழுகை, ஹதீஸ் மனனம்
01.00 மணி – வாசிப்பு நேரம் (கதை, நாவல், வரலாறு)
02.00 மணி – பகலுணவு
02.30 மணி – குறுந்திரைப்படம் அல்லது கார்டூன் அல்லது இஸ்லாமியத் திரைப்படம்
03.00 மணி – தூக்கம் அல்லது ஓய்வு
04.15 மணி – அஸர்த்தொழுகை, அல்குர்ஆன் ஹல்கா
04.45 மணி – விளையாட்டு (கரம், சதுரங்கம், Scrabble)
06.00 மணி – மஃதூறாத் மற்றும் மஃரிப் தொழுகை அல்குர்ஆன் கிராஅத் செவிமடுத்தல்
07.00 மணி – கற்றல் செயற்பாடுகள்
08.00 மணி – கணினி விளையாட்டு அல்லது செய்தி பாரத்தல்
08.30 மணி – குடும்ப மன்றம்
09.15 மணி – இரவுணவு
09.30 மணி – இஷாத்தொழுகை, வித்ர்தொழுகை, துஆப் பிரார்த்தனை
10.00 மணி – முஹாஸபா – சுயவிசாரணை மற்றும் தூக்கம்
05.00 மணி – சுபஹ் தொழுகை, அல்குர்ஆன் மனனம், மஃதூறாத்
06.00 மணி – தேனீர்
06.15 மணி – உடற்பயிற்சி
06.30 மணி – சிரமதானம் (வீடு சுத்திகரித்தல், தோடட்டப் பராமரிப்பு, ஆடைகழுவுதல், குளித்தல்)
07.15 மணி – பத்திரிகை வாசித்தல் அல்லது செய்தி இணையத்தளம் பார்வையிடல்
08.00 மணி – கற்றல் நடவடிக்கைகள்
09.00 மணி – காலை உணவு
09.30 மணி – ழுஹாத்தொழுகை
09.45 மணி – இணையத்தளம் மூலமான கற்றல்
11.00 மணி – ஓவியம் அல்லது ஆக்கம் அல்லது தட்டச்சு
12.15 மணி – பழச்சாறு தயாரித்து அருந்துதல்
12.30 மணி – ளுஹர் தொழுகை, ஹதீஸ் மனனம்
01.00 மணி – வாசிப்பு நேரம் (கதை, நாவல், வரலாறு)
02.00 மணி – பகலுணவு
02.30 மணி – குறுந்திரைப்படம் அல்லது கார்டூன் அல்லது இஸ்லாமியத் திரைப்படம்
03.00 மணி – தூக்கம் அல்லது ஓய்வு
04.15 மணி – அஸர்த்தொழுகை, அல்குர்ஆன் ஹல்கா
04.45 மணி – விளையாட்டு (கரம், சதுரங்கம், Scrabble)
06.00 மணி – மஃதூறாத் மற்றும் மஃரிப் தொழுகை அல்குர்ஆன் கிராஅத் செவிமடுத்தல்
07.00 மணி – கற்றல் செயற்பாடுகள்
08.00 மணி – கணினி விளையாட்டு அல்லது செய்தி பாரத்தல்
08.30 மணி – குடும்ப மன்றம்
09.15 மணி – இரவுணவு
09.30 மணி – இஷாத்தொழுகை, வித்ர்தொழுகை, துஆப் பிரார்த்தனை
10.00 மணி – முஹாஸபா – சுயவிசாரணை மற்றும் தூக்கம்
மேலே நாம் சொன்ன 75 வழி முறைகளும் மாதிரி நேரசூசியும் எல்லோருக்கும் முழுமையாகப் பொருத்தமாக அமையாது. எனினும் தங்களுக்குப் பொருத்தமான விடயங்களை முடியுமானவரை பின்பற்ற முயற்சிப்போம். எனவே Quarantine எனும் தனிமைப்படுத்தலானது இறைவனளித்த அருட்கொடையே எனப் புரிந்து வீட்டில் இருக்கும் இக்காலப் பிரிவை அல்லாஹ்வின் உதவியோடு நன்கு திட்டமிட்டு பயனுள்ள வழிகளில் பயன்படுத்தி வெற்றிபெறுவோம்.
VIDIVELLI.LK
கொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்
Reviewed by Lankastudents
on
9:45:00 PM
Rating:
No comments: