பரீட்சை எழுதும் மாணவர்களே உங்களுக்கு சில டிப்ஸ் இதோ ...!!

பொதுத் தேர்வு வெகு அருகில் . இனி , வீடே பரபரப்பாகி விடும் . அம்மா லீவு போட்டு டியூஷன் எடுப்பதும், அப்பா விடிகாலையில் எழுந்து காபி கலக்கித் தருவதுமாக..
இத்தனை மெனக்கெடுதலும் எதற்காக? பிள்ளை மார்க்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காகத்தானே! அதற்குத்தான் இங்கே வழிகாட்டியிருக்கிறார் , சென்னை, செயின்ட் ஜான்'ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் டாக்டர் கிஷோர்குமார்..
"முதலில் தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கான டிப்ஸ்களைச் சொல்கிறேன்..
எப்படி படிப்பது ?
* மனசு உற்சாகமாக இருக்கிறபோது, படிக்கிற விஷயங்களை புத்தி அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். எனவே, உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது படிக்க உட்காருங்கள்.
* ' எவ்வளவு சின்ஸியரா படிச்சாலும் , பரீட்சை ஹால்ல வெச்சு சுத்தமா மறந்து போயிடுதே . .' - இது பல மாணவர்களின் கவலை . எதையுமே புரிந்து கொண்டு படித்தால் மறக்கவே மறக்காது. கணிதமாக இருந்தால் ஃபார்முலாவை எழுதிப் பாருங்கள். அறிவியல் பாடமாக இருந்தால் வரைந்து பழகுங்கள் . வாய் விட்டுப் பலமுறை சொல்லி, மனதில் பதியவைத்து, பிறகு மனப்பாடம் செய்யுங்கள்.
* ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி ஒப்பிட்டுப் படிப்பதை வழக்கமாக்குங்கள் . மறதியை விரட்டும் அற்புத டெக்னிக் இது.
* தினமும் மாலை 2 மணி நேரமாவது படியுங்கள் . ஒரு பாடத்தை அதிகபட்சம் 40 நிமிடம் படிக்கலாம் . பிறகு , 10 நிமிட இடைவெளி விட்டு, வேறொரு பாடத்தை எடுத்து வைத்துப் படிக்க வேண்டும் . அப்போதுதான் படித்தது மனதில் தங்கும் . ஒருவரது தொடர்ந்த கிரகிக்கும் திறன் என்பது 40 நிமிடங்கள் மட்டுமே!
* எந்தெந்தக் கேள்விகள் .. எந்தெந்த மதிப்பெண்களில் கேட்கப்படும் என்பதை அனுமானிப்பதற்கு , மாதிரி வினாத்தாள்கள் பெரிதும் உதவும் . ஐந்து ஆண்டுகள் வரையிலான வினாத்தாள்களை வைத்துப் பயிற்சி எடுங்கள் .
* ஒரு கேள்வித்தாளை வைத்துக் கொண்டு மாடல் எக்ஸாம் எழுதிப் பார்ப்பது, தேர்வின்போது ' டைம் மேனேஜ்மென்ட்' செய்வதற்குப் பெரிதும் உதவும்.
* சப் - ஹெட்டிங்குகளை சிறு குறிப்பு போல் எடுத்துக் கொண்டு , எழுதியும் படித்தும் பார்க்க வேண்டும் .
* இரவில் .. அதிகாலையில்.. என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் படித்துப் பழகியிருப்பீர்கள் . பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக அந்த நேரத்தை மாற்ற வேண்டாம் . புதிதாக அதிக நேரம் படிக்கத் துவங்குகிறவர்கள் எனில் , அதிகாலை நேரம்தான் சிறப்பானது.
* ' ஸ்டடி ஹாலிடேஸை' வீணாக்காமல் படித்தால் விடிய விடியப் படிக்கும் அவசியம் இல்லை . அயர்ச்சியும் ஏற்படாது .
* தியானம் அல்லது இறை வழிபாட்டில் சிறிது நேரம் ஈடுபடுங்கள். இரண்டுமே உங்களுக்குள் புத்துணர்வு பிளஸ் தன்னம்பிக்கையை அள்ளித் தரும் .
* பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் , ப்ரீ -போர்டு எக்ஸாம் வைப்பார்கள் . இதைப் பொதுத் தேர்வாகக் கருதி தயாரானாலே, தேர்வு ஜுரத்தில் இருந்து விடுபட்டு விடலாம் .
* தேர்வுக்கு முந்தின நாள் , விடிய விடியப் படிப்பதோ. . அதிக நேரம் கண் விழிப்பதோ கூடவே கூடாது .
பரீட்சை ஹாலில் . .
* தேர்வு மையத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுங்கள். நம்மூர் டிராஃபிக் பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டுமா என்ன ?
* பழகிய பேனாவாலேயே எழுதுங்கள். கூடுதலாக பேனா, பென்சில் வைத்திருப்பது நல்லது . அந்தப் பேனாவையும் நன்றாகப் பழக்கியே எடுத்துச் செல்லுங்கள்.
* வினாத்தாளைக் கையில் வாங்கியதுமே ஒன்றுக்கு இருமுறை பதற்றமே இல்லாமல் முழு கவனத்துடன் அதை வாசியுங்கள்.
* தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். எந்தப் பிரிவு என்பதையும் கேள்வி எண்ணையும் தெளிவாகக் குறிப்பிடுங்கள் .
* கேள்வியை நன்றாகப் புரிந்து , உள்வாங்கிக் கொண்டு பதில் எழுதுங்கள்.
* நன்கு இடம் விட்டு தெளிவாக எழுதுங்கள்.
* தேவையான இடங்களில் அண்டர் லைன் செய்ய , கறுப்பு ஸ்கெட்ச் பேனாவைப் பயன்படுத்துங்கள்.
* வினாத்தாளில் சொல்லப்பட்டுள்ள வரிகளுக்கு மிகாமல் பதில் தர வேண்டியது மிகவும் அவசியம் .
* முதல் தேர்வு எழுதி முடித்ததும் கிடைக்கிற உற்சாகம் கடுகளவும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கடைசித் தேர்வு வரை அதே உற்சாகம். . அதே உத்வேகம் என்று இருங்கள் .
* தேர்வு என்பது ஒரு சவால். அதை எந்த பயமும் இன்றி குதூகலத்துடன் சந்திக்கத் தயாராகுங்கள் . வெற்றி உங்கள் வசம்தான் !
இனி .. பெற்றோருக்கான டிப்ஸ்..
* தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகளை திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள் . வீடு மாற்றுதல், சுண்ணாம்பு அடித்தல் .. உள்ளிட்ட வேலைகளை தள்ளிப் போடுங்கள்.
* கலை, ஓவியம், விளையாட்டு .. போன்றவற்றில் உங்கள் பிள்ளையின் கவனம் சிதறலாம். நீங்கள்தான் பக்குவமாகப் புரிய வைக்க வேண்டும் .
* வழக்கத்தை விட அதிக 'ஸ்ட்ரெய்ன் ' எடுத்துப் படிப்பதால், சீக்கிரமே சோர்வடைந்து விடுவார்கள் . எனவே, சத்தான உணவையே கொடுங்கள் . முக்கியமாக , நேரம் தவறாமல் சாப்பிட வைக்கிற பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது .
* புரதச் சத்துள்ள பருப்பு வகைகள் , காய்கறிகள் , கீரை வகைகள் (வல்லாரை கீரை ஞாபக சக்தியைத் தர வல்லது) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள் .
* அவர்களுக்கு திடீரென ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் ' இந்த நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சே. .' என்று புலம்ப வேண்டாம். ' முதல்ல ரெஸ்ட் எடு. உடம்பு சரியான பிறகு படிச்சுக்கலாம் ' என்று சொல்லுங்கள்.
* படிக்கிற பிள்ளைகளின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ' அதை முடிச்சிட்டியா ? இதுதானே படிக்கிற ?' என்றெல்லாம் கேட்பதை விடவும், ஏதேனும் கை வேலை செய்தபடியோ , புத்தகம் படித்தவாறோ சும்மா அவர்களுக்கு 'கம்பெனி ' கொடுப்பது அதிக பலன் தரும் .
* நீங்களும் வீட்டில் உள்ள அனைவரும் தருகிற ஊக்கமும் நம்பிக்கை வார்த்தைகளும்தான் பிள்ளைகளுக்கு கூடுதல் சக்தியைத் தரும் . எனவே, கொஞ்சம்கூட சோர்ந்து போகாமல் தொடர்ந்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
ஆல் தி பெஸ்ட்!

பரீட்சை எழுதும் மாணவர்களே உங்களுக்கு சில டிப்ஸ் இதோ ...!! பரீட்சை எழுதும் மாணவர்களே உங்களுக்கு சில டிப்ஸ் இதோ ...!! Reviewed by Lankastudents on 10:50:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.