SAITM ஐ மூடிவிட்டாவது மாணவர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்
"சைற்றத்தை" மூடிவிட்டாவது பாதிக்கப்பட்டுள்ள 6,500 மாணவர்களின் வகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
தனியார் பல்கலைக்கழகம் தேவையா? அல்லது தேவையில்லையா? என்பது பற்றி அரசாங்கம் பின்னர் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுக்க முடியும். இந்தப் பிரச்சினையால் மாணவர்களின் வகுப்புக்கள் தடைப்பட்டுள்ளதை எவ்வகையிலும் ஏற்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
சைற்றம் விவகாரம் பூதாகரம் எடுத்துள்ள நிலையில் மாணவர்களின் கற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை காலம் கடத்த முடியாது. அரசாங்கம் இது தொடர்பில் துரித தீர்மானம் எடுப்பது அவசியமாகும். மாணவர்களின் உரிமை பிரச்சினையானது இந்த நாட்டின் எதிர்காலத்துடன் தொடர்புபட்டுள்ளது.
அந்த வகையில் நாட்டின் எதிர்காலத்தோடு விளையாட முடியாது. நாட்டிற்கு பெருமளவு டாக்டர்கள் தேவைப்படுகின்றனர். எதிர்காலத்தில் இந்த தேவை மேலும் அதிகரிக்கும். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு டாக்டர்கள், பொறியியலாளர்கள் பெருந்தொகையாக தேவைப்படுகின்றனர். அவர்களை உருவாக்குவதில் "சைற்றம்" போன்ற விவகாரங்களை தடையாக்கிக் கொண்டு செயற்பட முடியாது.
6,500 மாணவர்கள் கடந்த பல மாதங்களாக வகுப்புகள் நடாத்தப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களது உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
சைற்றத்தை மூடியாவது மாணவர்களின் வகுப்புக்களை வழமைபோல் நடத்த துரித நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)
No comments: